சுடச்சுட

  

  சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க நடவடிக்கை

  By dn  |   Published on : 04th December 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மானாமதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.

  செங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை தனி ரயிலில் வந்த தெற்கு ரயில்வே  பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, அங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் ஓட்டுநர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கும் விடுதியைத் திறந்துவைத்தார்.

  பின்னர் புதிய நடைமேடை, கூடுதல் இருப்புப் பாதைகள் அமைக்கும் பணிகளைப்  பார்வையிட்டார். இதையடுத்து, தென்காசி ரயில் நிலையத்திலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  செங்கோட்டையிலிருந்து மதுரை வரையிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், இப்போது நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வுகள் செய்ய வந்துள்ளேன். தெற்கு ரயில்வேயின் அனைத்துப் பிரிவு அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

  செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்கு இன்னும் ரூ.300 கோடி தேவை. ஆனால், நிகழாண்டில் ரூ.20 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் எந்த ஆண்டில் முடிவடையும் எனக் கூற முடியாது.

  செங்கோட்டையிலிருந்து விரைவில் சென்னைக்கு ரயில் இயக்கப்படும். இப்போது மானாமதுரையிலிருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

  முன்னதாக, சென்னைக்கு கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும்; இரட்டைப் பாதை அமைக்க வேண்டும்; மதுரையிலிருந்து பேரையூர், வத்திராயிருப்பு, சேத்தூர், புளியங்குடி வழியாக புதிய வழித்தடத்தை உருவாக்க வேண்டும்; புளியங்குடி,  வாசுதேவநல்லூர், சேத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தபால் அலுவலகங்களில் டிக்கெட் புக்கிங் வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி எம்.பி. லிங்கம் மனு அளித்தார்.

  தென்காசி ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன், நகர வர்த்தக சங்க நிர்வாகிகள், ஆர்.முருகன்ராஜ் உள்ளிட்டோரும் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai