சுடச்சுட

  

  நயினார்குளம் சாலையை சீரமைக்க வேண்டும்: மேயரிடம் கோரிக்கை

  By dn  |   Published on : 04th December 2013 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ள நயினார்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் மேயரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

  இதுதொடர்பாக அக்கட்சியின் தொகுதித் தலைவர் சாகுல்ஹமீது, நெல்லை பகுதித் தலைவர் ஜாபர், செயலர் கபீர் அஸ்கர், 41-ஆவது வார்டு நிர்வாகிகள் பெரோஸ், பீர், மூஸா உள்ளிட்டோர் மேயர் விஜிலா சத்தியானந்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 41-வது வார்டில் அமைந்துள்ளது நயினார்குளத் தெரு. இந்த பகுதியானது நயினார்குளம் சாலையையும், வடக்கு ரத வீதியையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.

  இங்கு புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. சாக்கடை நீர் தேங்குவதால் கொசுக்கள் பெருமளவு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மாநகராட்சிக்குள்பட்ட 11-ஆவது வார்டில் திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்போது, இங்கு சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

  ஆனால், 25 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப்படுகிறது. 125 மீட்டருக்கு தார்ச் சாலையாக அமைக்கப்படுகிறது. இதனை ஏற்க முடியாது. எனவே முழுமையாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

  இதே கோரிக்கையை வலியுறுத்தி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தா ஜெகதீஸ்வரனும் கோரிக்கை மனு அளித்தார். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட கோடீஸ்வரன் நகர் 10-வது குறுக்குத் தெருவில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் கருவேலமரங்களாலும், புதர்களாலும் நிறைந்து காணப்படுகிறது. சில நாள்களுக்கு முன் இங்கு மலைப்பாம்பு பிடிபட்டது. பகல் நேரத்திலும், இரவு நேரங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

  எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பூங்கா இடத்தை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெசிபி மூலம் முட்புதர்களை அகற்ற வேண்டும் என திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த சண்முகசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்தார். ஏராளமான பொதுமக்களும் மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai