சுடச்சுட

  

  106 ஊராட்சிகளில் கிராம விளையாட்டுப் போட்டிகள்: ரூ.21.20 லட்சம் ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

  By dn  |   Published on : 04th December 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்த 106 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.21.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன்  தெரிவித்தார்.

  ஊராட்சிகளில் கிராம விளையாட்டு மற்றும் குழுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது: கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கிராம அளவில் தினத்திறன் விளையாட்டுப் போட்டிகள், குழுப் போட்டிகளை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

  மாவட்டத்தில் 19 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 425 ஊராட்சிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிக மக்கள் வசிக்கும் ஊராட்சிகள் அடிப்படையில் 106 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ.20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் போட்டிகளாக ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகியவை நடத்தப்படும்.

  குழுப் போட்டிகளாக கையுந்துப் பந்து, கபடி, கால்பந்து ஆகியவை நடைபெறும். 30 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்காக இரு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் 240 பரிசுகள் வழங்கப்படும். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர், குழுக்களுக்கு பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.

  வயது விவரத்தை உறுதி செய்ய வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் எடுத்து வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த ஊராட்சி எழுத்தரிடம் இம்மாதம் 15-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  ஜனவரி 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்போர் சாதி, மதம் சார்ந்த பெயர்களையோ, நிறங்களையோ, ஆடைகளையோ, கை காப்புகளையோ பயன்படுத்தக் கூடாது. போட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

  போட்டிக்கான தேதி, இடம், நேரம் ஆகியவற்றை ஊராட்சிகள்தோறும் அமைக்கப்படும் விளையாட்டுப் போட்டி குழுவே இறுதி செய்யும். 19 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சித் தலைவர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் முன்னின்று இப்போட்டிகளை நடத்தவுள்ளனர் என்றார் ஆட்சியர்.

  இக்கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai