சுடச்சுட

    

    நாய்க்கு நவீன எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை

    By திருநெல்வேலி,  |   Published on : 05th December 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநெல்வேலியில் சிப்பிப்பாறை இன நாய்க்கு நவீன எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை செய்து திருநெல்வேலி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம், பன்னம்பாறையைச் சேர்ந்தவர் வேல்குமார். நாய்ப் பண்ணை வைத்துள்ளார். இவரிடம் சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த ஒரு வயது முடிந்த பெண் நாய் உள்ளது. விபத்தில் நாயின் வலது காலில் முறிவு ஏற்பட்டு, நாயால் காலை ஊன்ற முடியவில்லை.

    இதையடுத்து வேல்குமார் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாயை அழைத்து வந்தார். நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். பேராசிரியர் ஆர். ராம்பிரபு, உதவிப் பேராசிரியர்கள் எம். சிஜு சைமன், மருத்துவர் சவி குப்தா ஆகியோரடங்கிய குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்தனர்.

    முறிந்த எலும்புகளை பழைய நிலையில் வைத்து அதன் மீது 3.5 மில்லி மீட்டருக்கு மாறும் தன்மையுடைய சுருக்கத் தகடு, கூடுதல் நிலைத்த தன்மைக்காக 3.5 மில்லி மீட்டர் ஸ்டீமென் பின் பொருத்தினர். கடந்த புதன்கிழமை (நவ.27) அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மறு நாளே நாய் நடக்கத் தொடங்கியது. இப்போது, நாய் நலமுடன் உள்ளதாகக் கூறிய வேல்குமார்,  இதற்காக மருத்துவக் கல்லூரிக்கு நன்றி தெரிவித்தார்.

    கல்லூரி முதல்வர் சே. பிரதாபன் கூறுகையில், திருநெல்வேலிக்கு மருத்துவக் கல்லூரி வந்ததாலேயே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. சென்னை, நாமக்கல்லைத் தொடர்ந்து அனைத்து கால்நடைகளுக்கும் நவீன சிகிச்சை அளிக்க இங்கு வசதிகள் உள்ளன என்றார் .

    அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் எம். சிஜு சைமன் கூறியது: மனிதர்களுக்கு எலும்பு முறிவுக்கு செய்யப்படும் சிகிச்சையைப் போன்றே நாய்க்கும் சிகிச்சை செய்யப்பட்டது. நாயின் எடை 26 கிலோ என்பதால் தனித்தனியே செய்யப்படும் இரு முறைகளையும் (சுருக்கத் தகடு, ஸ்டீமென் பின்) ஒரே அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தினோம்.3 மாதங்களுக்குப் பிறகு தேவையெனில் தகடுகளை எடுத்து விடலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai