சுடச்சுட

    

    நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் தெற்கு ரயில்வே திட்டங்கள்

    By திருநெல்வேலி  |   Published on : 05th December 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் உள்பட தென்னகத்தில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் பணிகள் பாதியில் நிற்பதாக பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

    திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் வரையில் உள்ள ரயில் நிலையங்கள், இருப்புப் பாதைகள், இருப்புப் பாதை மேம்பாலம், தரைப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் கூறியது:

    பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வாலும், மின்கட்டணம் அதிகரித்திருப்பதாலும் ஆண்டுக்கு, ஆண்டு ரயில்வே நிர்வாகத்துக்கான செலவுத் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. தெற்கு ரயில்வே கோட்டத்தில் நாளொன்றுக்கு 256 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 10 முதல் 15 ரயில்களில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே நிற்பது என்பது தவிர்க்க முடியாதது. இயந்திரக் கோளாறு என்பது எப்போது வரும் என்பதை கணிக்க முடியாது. தொழில்நுட்பங்கள் நிறைந்த பணி என்பதால் ரயில்கள் பாதியில் நிற்பது தவிர்க்க முடியாமல் உள்ளது. இருப்பினும், இதர கோட்டங்களுடன் ஒப்பிடுகையில் தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்களின் இயக்கம் 94 சதவீதம் சிறப்பாக உள்ளது. வடக்குப் பகுதியில் 60 சதவீதம் மட்டுமே.

    நிதிப் பற்றாக்குறை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதி முழுமையாக வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக தெற்கு கோட்டத்துக்கு கடந்தாண்டு ரூ.1,100 கோடி பெறப்பட்டது.  நிகழாண்டு ரூ.560 கோடிதான் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு ரூ.500 கோடிதான் வரும் என்ற நிலை உள்ளது.

    எனவே, ரயில்வே திட்டப் பணிகள் பாதியில் நிற்கின்றன. குறிப்பாக பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கும், பாலக்கோடுக்கும் அமைக்கப்படும் இருப்புப் பாதை பணிகளில் 20 முதல் 50 கி.மீ. தொலைவு வரையில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கே ரூ.20 கோடி முதல் 50 கோடி வரையில் வழங்கப்படாமல் உள்ளது. செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை திட்டத்துக்கு ரூ.300 கோடி தேவை. ஆனால், மத்திய அரசு ரூ.20 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

    இரட்டைப் பாதை: மதுரையிலிருந்து திருநெல்வேலி வரையில் இரட்டைப் பாதை ரயில்வே திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. ஆய்வுப் பணிகள் முடிந்து திட்டத்தின் மூலம் வருவாய் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டால்தான் திட்டத்தை தொடங்க ரயில்வே நிர்வாகம் முன்வரும். எந்தவொரு திட்டத்துக்கும் அதன் முதலீட்டு மதிப்பில் ஆண்டுக்கு 50 சதவீதம் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதே ரயில்வேயின் கொள்கை.

    மின்  மயமாக்கல்: மதுரையிலிருந்து திருநெல்வேலி வரையிலான வழித் தடத்தில் நடைபெறும் மின்மயாக்கல் பணிகள் மூன்று அல்லது ஆறு மாதங்களில் நிறைவு பெறும். திருநெல்வேலி மண்டலத்தில் மட்டுமல்லாது பல்வேறு பகுதிளில் ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    காவல் கிணறு: ரயில் நிறுத்தம் என்பது இருசக்கர வாகனம், கார், பஸ்களை நிறுத்தும் இடம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் நிறுத்திச் செல்ல முடியாது. ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் குறைந்தது 5 கி.மீ. தொலைவு இடைவெளி வேண்டும். மேலும், மீட்டர் கேஜ், அகலப் பாதை, பயணிகள், சரக்குகள், இதர தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். காவல்கிணறு ரயில்நிலையம் தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

    பெங்களூரு ரயில்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக பெங்களூருக்கு தினமும் ரயில் இயக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    பழனிக்கு ரயில் இயக்குவது, ஏழைகள் ரதம் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு புதிய ரயில்கள் இயக்குவது தொடர்பாக நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai