சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் காணப்படுகின்றன.

    திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை 73 கி.மீ. தொலைவும், பாளையங்கோட்டையில் இருந்து  அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை 130 கி.மீ. தொலைவும், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலை 85 கி.மீ. தொலைவும், தென்காசியில் மதுரைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 137 கி.மீ. தொலைவும் கொண்டவை.

    பாளையங்கோட்டையில் இருந்து மேலப்பாளையம், பத்தமடை, சேரன்மகாதேவி வழியாக அம்பாசமுத்திரம் செல்லும் 45 கி.மீ. தொலைவுள்ள சாலையில் பல  இடங்களில் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. மேலச்செவல் கொழுமடையில்  இருந்து கல்லிடைக்குறிச்சி வரை 20 கி.மீ. தொலைவில் மிகவும் பழுதான சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

    போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையைச் சீரமைத்து 2 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் பிரதான சாலையும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைகள் தவிர மாவட்ட முதன்மை சாலைகளும் பரமரிக்கப்படாத நிலையில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

    ஏற்கெனவே சேதமடைந்துள்ள இந்தச் சாலைகள் அண்மையில் பெய்த மழையால் மேலும் பழுதாகி போக்குவரத்துக்கு தகுதியற்றதாகிவிட்டன.

    சாலைகளில் மிகவும் மோசமாக உள்ள இடங்களில் மட்டும் தாற்காலிக நடவடிக்கையாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவை ஒரு சில தினங்களுக்குக்கூட தாக்குப்பிடிக்கவில்லை.

    பழுதடைந்த சாலைகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  சாலையைச் சீரமைக்க நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். உடனடியாக இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai