சுடச்சுட

  

  விடைத்தாள்களில் பக்கம் அதிகரிப்பு; மாணவர் புகைப்படமும் இடம்பெறும்

  By கடையநல்லூர்  |   Published on : 06th December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம் முழுவதும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள்  முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது. அத்துடன் விடைத்தாள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது.

  கடந்த காலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடப் பிரிவுகளுக்கு மட்டும் டம்மி எண்  முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

  எனினும், தேர்வுகளில் பல இடங்களில் ஆள்மாறாட்டம், விடைத்தாள்கள்  காணாமல்போவது, சேசிங் முறையில் திருத்தும் முகாமைக் கண்டறிந்து மதிப்பெண்கள் பெறுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வந்தன.

  இந்நிலையில், தமிழக கல்வித் துறை புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களில், தேர்வு எழுதும் முறையை 2014-ஆம் ஆண்டில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள ஆணை விவரம்:

  இப்போது பொதுத் தேர்வுகளில் வழங்கப்பட்டு வரும் விடைத்தாள்களில் மாற்று எண் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் நிலவி வந்தது.

  இந்த முறையை மாற்ற, தேசிய தகவலியல் மையம் மற்றும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளுடன் கல்வித் துறை ஆலோசித்து புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

  அதன்படி, இப்போது விடைத்தாளில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி எண்ணுக்குப் பதிலாக பார்கோடு முறை (ஆஹழ் இர்க்ங்) அமல் செய்யப்படுகிறது. இதில் தேர்வு எழுதுபவரின் பெயர், தேர்வு மையம், தேர்வு நாள், தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படமும் இடம்பெறும்.

  இவையனைத்தும் கொண்ட தாள் "டாப் ஷீட்'  எனப்படும். ஒவ்வொரு நாள் தேர்விலும் ஒவ்வொரு டாப் ஷீட் இடம் பெற்றிருக்கும். டம்மி எண்ணைப் பயன்படுத்தும்போது மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், புதிய டாப் ஷீட் முறையால் விடைத்தாள்களை தாமதமின்றி திருத்தி மதிப்பெண்களைப் பதிவு செய்ய முடியும். மேலும் மதிப்பெண் சான்றிதழ்களையும் விரைந்து அச்சடிக்க முடியும்.

  இதனிடையே, இப்போதுள்ள முதன்மை விடைத்தாளின் பக்கங்களின்  எண்ணிக்கையையும் அதிகரிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின்  எண்ணிக்கை 16-லிருந்து 40-ஆக உயர்த்தப்படும். 10-ஆம் வகுப்புத் தேர்வில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 8-லிருந்து 32ஆக உயர்த்தப்படும். இவையனைத்தும் மார்ச் - ஏப்ரல் 2014 தேர்வு முதல் அமல் செய்யப்படும்.

  இதனால் கூடுதல் விடைத்தாள்களை வாங்கி நூல் கொண்டு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் விடைத்தாள்கள் காணாமல்போவது தவிர்க்கப்படும். மேலும், அறைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும். இதனால் தேர்வுஅறை குற்றங்கள் தவிர்க்கப்படும்.

  ஏற்கெனவே இருப்பில் உள்ள பழைய முதன்மை மற்றும் கூடுதல் விடைத்தாள்களை 10, 12-ஆம் வகுப்பு அரையாண்டு, இறுதி திருப்புதல் தேர்வுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai