சுடச்சுட

  

  21 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்பனை இல்லை

  By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்கவும், சிறார்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் டாஸ்மாக்  கடைகள் மற்றும் மதுக்கூடங்களில், 21 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படமாட்டாது என விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

  இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அனைத்துக் கடைகளின்  முகப்பிலும் டாஸ்மாக் நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டுள்ளது வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது.

  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அரசுக்கு வருமானமாகக் கிடைக்கிறது.

  கடந்தாண்டில் மட்டும் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை விஞ்சும் வகையில் நடப்பாண்டு இப்போதே ரூ.21,680 கோடிக்கு விற்பனை நடந்திருப்பதாகவும், நிதியாண்டு முடிவதற்குள் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இது ஒருபுறமிருக்க இந்த விற்பனையால் 15 வயதுமுதலே சிறுவர்கள் குடிக்கத் தொடங்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது. பள்ளி வகுப்பறையில் மதுபாட்டில்களுடன் பிடிபடும் மாணவர்கள், தேர்வுக்கு மது அருந்திவிட்டு வந்த மாணவர்கள், வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள் தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதே இதற்கு சாட்சியாக உள்ளது.

  இவை மட்டுமல்லாது வேலைக்குச் செல்லும் சிறுவர்கள், சாலையோர சிறுவர்கள் பலரும் விளையாட்டாகவும், சினிமா காட்சிகளின் மோகத்தாலும் மது அருந்தத் தொடங்கி பின்னர் அடிமையாவதும் நடைபெறுகிறது.

  தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, திருமண விழா என விசேஷ நாள்களுக்காக குடிக்கத் தொடங்கி பின்னர் நாள்தோறும் மது அருந்தும் பழக்கத்துக்கு வந்துவிடுகின்றனர்.

  சிறார்களை இதிலிருந்து மீட்கவும், பள்ளி மாணவர்கள் மது அருந்துவதைத் தடுக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் புதிதாக ஸ்டிக்கர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.

  "தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்) விதிகள் 2003 விதி எண் 11ஏ-ன்படி 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 2,28 கடைகளிலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் இந்த உத்தரவைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai