சுடச்சுட

  

  அனுமதியின்றி வைக்கப்பட்ட 251 விளம்பரப் பதாகைகள் அகற்றம்

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகரில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 251 விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

  திருநெல்வேலி மாநகரில் சாலையோரத்தில் மிகவும் பிரமாண்ட அளவுகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

  இதுமட்டுமன்றி இவ்வாறு வைக்கப்படும் பதாகைகளின் உரிமையாளர்கள்  பொதுப்பணித் துறையின் இடத்தில் வைத்தால் அந்தத் துறைக்கு தரை வாடகை, மாநகராட்சிக்கு விளம்பரத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். மின்வாரியத்துக்கு மின்கட்டனம் செலுத்த வேண்டும். தடையின்மைச் சான்றுகளையும் பெறுவது அவசியம். ஆனால், இந்தக் கட்டணங்களை சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தாமல் விதிமீறி செயல்பட்டுவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  இதையடுத்து அனுமதியின்றியும், முறையாக கட்டணங்களைச் செலுத்தாமல் விதிகளை மீறியும் டிஜிட்டல் பிளக்ஸ் விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளவர்கள், தாங்களாக அப்புறப்படுத்திக்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் எடுக்காவிட்டால் அதிகாரிகள் முன்னிலையில் அவை அனைத்தும் அப்புறப்படுத்தப்படும். மேலும், அதற்கான கட்டணம் சம்பந்தப்பட்டவரிடமே வசூலிக்கப்படும் என ஆட்சியர் மு.கருணாகரன் அறிவித்திருந்தார்.

  அதன்படி திருநெல்வேலி மாநகரில் விதிமீறிய விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணி சனிக்கிழமை காலையில் தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த.மோகன் தலைமையில் விளம்பரப் பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

  தச்சநல்லூரில் நடைபெற்ற பணியை ஆட்சியர் மு.கருணாகரன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விளம்பரப் பதாகைகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று வைத்திட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையிடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.  ஆனால், அரசு விதிகளுக்கு மாறாக மாநகராட்சி பகுதியில் 251 விளம்பரப் பதாகைகள் விதிமீறி இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளையும் இந்தப் பணி தொடரும் என்றார் அவர்.

  விளம்பரப் பலகைகளை அகற்றும்போது மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் மெர்லின் கிறிஸ்டல், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, சாலை ஆய்வாளர் முனியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai