சுடச்சுட

  

  திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி  திருநெல்வேலி மாவட்டம் வருகிறார். 28-ஆம் தேதி குற்றாலத்தில் நடைபெறும் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கடையநல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

  இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: டிசம்பர் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாகர்கோவிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திருநெல்வேலி  மாவட்டம் வருகை தரும் கட்சிப் பொருளாளர் ஸ்டாலினுக்கு காவல்கிணறில் காலை 11 மணியளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. குற்றாலத்தில் தங்கும் அவர் மாலையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும், மக்கள் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

  28-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு குற்றாலம் காசிமேஜர்புரத்தில் உள்ள ஸ்ரீமுருகன் திருமண மண்டபத்தில் இம்மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் 270 பேரை சந்தித்து அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

  அன்று இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 90- ஆவது பிறந்த தின விழா, பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில்  பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். ஸ்டாலின் வருகை தொடர்பாக ஆலோசிக்க வரும் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ஆர்யாஸ் அபிநயா அரங்கில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வண்ணார்பேட்டை சகுந்தலா ரமா அரங்கில் வைத்து மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும்  ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கின்றனர் என்றார் அவர்.

  பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.வி. சுரேஷ் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai