சுடச்சுட

  

  ஏற்காடு வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்: சரத்குமார்

  By dn  |   Published on : 09th December 2013 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் எதிரொலித்து அ.தி.மு.க. வெற்றி பெறும் என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்  ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின்  தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சரத்குமார் மேலும் பேசியதாவது:

  சமத்துவ மக்கள் கட்சியின் 2-ஆவது மாநில மாநாடு திருநெல்வேலி நகரத்தில் உள்ள பொருள்காட்சித் திடலில், 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

  மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்கள், பெண்களை சிறந்த முறையில்  வழிநடத்தும் வகையில் இந்த மாநாடு அமையும். விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்த அறிவுபூர்வமிக்க சிறந்த கருத்துகளை பொதுமக்களிடையே கொண்டுசெல்லும் சிறந்த மாநாடாக மாற்றிக் காட்ட வேண்டும்.

  மக்களிடையே சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்து சிறிதும் மாறுபடாமல் ச.ம.க. வளர்ந்து கொண்டிருக்கிறது. இக் கட்சியை மேலும் பலப்படுத்த இளைஞர்களையும், பெண்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியானது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

  முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வலுவான 3-ஆவது அணி அமைந்தால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினரால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்றார் அவர்.

  இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜன், கிழக்கு மாவட்டத் தலைவர் லாரன்ஸ், மேற்கு மாவட்டத் தலைவர் தங்கராஜ், அமைப்புச் செயலர் ஆர்.கே.காளிதாஸ், தென்மண்டல அமைப்புச் செயலர் சுந்தர், கன்னியாகுமரி மாவட்டச் செயலர்கள் அரசன் பொன்ராஜ், சுரேஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai