சுடச்சுட

    

    ஒலி மாசு, கழிவுநீர் கலப்பு: நகர்ப் பகுதி குளங்களைப் புறக்கணிக்கும் நீர்வாழ் பறவைகள்!

    Published on : 10th December 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலிக்கு வரும் வெளிமாநில நீர்வாழ் பறவைகள் அனைத்தும் ஒலி மாசுக்கு அஞ்சி, புறநகர்ப் பகுதிகளில் உள்ள குளங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. மாநகரில் உள்ள குளங்களில் ஒன்றிரண்டு பறவைகளை மட்டுமே காண முடிகிறது.

    திருநெல்வேலி மாவட்டம், கூந் தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு தை மாத அமாவாசையில் இருந்து, ஆடி மாத அமாவாசை வரையிலான காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் தங்கிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஆஸ்திரேலியா, அந்தமான் நிகோபார் தீவுகள், இலங்கை பகுதிகளைச் சேர்ந்த பறவையினங்கள் இங்கு வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கூழைக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீர்க்காகம், செங்கால்நாரை, பாம்புதாரா, சென்டுவாத்து, சாரைநாரை, அரிவாள்மூக்கன், புல்லிமூக்கு வாத்து, நத்தை, அரிவாள்மூக்கன், சாம்பல்நாரை, சாரை நாரை, முக்கலிப்பன் உள்பட வெளிநாட்டு, வெளிமாநில பறவைகள் என 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கூந்தன்குளத்துக்கு வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    கூந்தன்குளத்துக்கு வரும் பறவைகளில் பெரும்பாலானவை சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியை ஒரு மாதத்துக்கு முன்பே அடைந்து, அங்கு ஒரு சில வாரங்கள் தங்கிவிட்டுதான் கூந்தன்குளத்துக்குச் செல்லும். அதன்படி கார்த்திகை மாதத்தில் திருநெல்வேலி நகரில் ஏராளமான வெளிமாநிலப் பறவைகளைக் காணமுடியும்.

    திருநெல்வேலி நகர்ப் பகுதியில் உள்ள நயினார்குளம், கண்டியப்பேரிகுளம்,  வேய்ந்தான்குளம், மேலக்கருங்குளம் குளம், புறநகர்ப் பகுதியில் உள்ள ராஜவல்லிபுரம் குளம், அருகன்குளம் ஆகியவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தங்கியிருக்கும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நகர்ப் பகுதிகளில் பறவைகள் தங்குவது  சிறிது சிறிதாக குறைந்து இப்போது அறவே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

    திருநெல்வேலி நகரத்தைப் பொருத்தமட்டில் வேய்ந்தான்குளம், மேலக்கருங்குளம் ஆகியவற்றில் பறவைகள் தங்கிச் செல்வதற்கு தகுந்த தண்ணீர், சூழ்நிலை இல்லையென்றாலும், நயினார்குளத்தில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. ஆனால், இந்தக் குளத்தைச் சுற்றிலும் தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் உள்பட 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் நயினார்குளத்தின் அருகே நிலவும் ஒலி மாசு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

    குளத்தில் தீவு போன்ற செயற்கைத் திட்டுகளோ, பெரிய அளவிலான மரங்களோ இல்லை. போக்குவரத்துக்கு இடையூறு என்றுகூறி குளக்கரையில் இருந்த சில பெரிய மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. கழிவுநீர் கலக்கும் நிலையும் உள்ளதால் தண்ணீர் தூய்மையிழந்து வருகிறது. இதனால், இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கிச் சென்ற பறவையினங்களும் இப்போது வருவதில்லை. ஒலி மாசுக்கு அஞ்சும் வெளிமாநில, நீர்வாழ் பறவைகள் அனைத்தும், திருநெல்வேலியின் புறநகர்ப் பகுதிகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து உதவி வனப் பாதுகாவலர் இரா.காஞ்சனா கூறியதாவது: திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள பறவையினங்கள், இங்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பறவையினங்களைக் கணக்கெடுக்கத் திட்டமிடப்பட்டது.

    அதன்படி கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கியுள்ள இந்தக் கணக்கெடுப்பு மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு நடத்தப்படுகிறது.

    முதல்நாள் கணக்கெடுப்பில் 20-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அறியப்பட்டுள்ளன.

    இவற்றில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பறவையினங்கள் இருந்தன. ஆனால், வெளிநாட்டுப் பறவையினங்கள் இல்லை. திருநெல்வேலி நகரை பொருத்தவரை புறநகர் பகுதியான ராஜவல்லிபுரம், அருகன்குளத்தில்தான் அதிக பறவைகள் வசிப்பது தெரியவந்துள்ளது. நகர்ப் பகுதியை பறவைகள் புறக்கணிப்பதற்கு ஒலி மாசு மிக முக்கிய காரணம்தான், அதை மறுப்பதற்கில்லை என்றார்.

    அரசு நடவடிக்கை எடுக்குமா?

    இதுகுறித்து "ஏ ட்ரீ' ஃபவுண்டேசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.மதிவாணன் கூறியதாவது:

    திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பறவைகளைக் கணக்கெடுத்து வருகிறோம். இங்கு நீர்வாழ் பறவையினங்கள் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. 15-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவையினங்கள் எங்களது கணக்கெடுப்பின்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதவிர மாநிலம் விட்டு மாநிலம் வரும் பல்வேறு வகை பறவைகள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகின்றன.

    குளங்களில் கழிவுநீரை கலக்கச் செய்வதாலும், வேலிகாத்தான் மற்றும் ஆகாயத்தாமரை பெருக்கத்தாலும் நீர்வாழ் பறவையினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர பட்டாசு வெடித்தல், வாகன இரைச்சல் போன்ற ஒலிமாசானது வெளிநாடு மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் இருந்து வரும் பறவைகளை மிகவும் அச்சுறுத்துகின்றன.

    இதுபோன்ற நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குளங்களை நல்ல முறையில் பராமரித்து, மரக்கன்றுகள் நடும் பணியை அதிகரித்தால் இப்போது நம் நாட்டில் உள்ள பறவையினங்களைக்  காக்கவும், வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்லவும் தகுந்த வழி பிறக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai