சுடச்சுட

  

  செப்பறை அழகியகூத்தர் கோயிலில் கொடியேற்றம்: 17-ல் தேரோட்டம்

  By dn  |   Published on : 10th December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை (தாமிரசபை) அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா  திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இம் மாதம் 17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

  தாமிரவருணி நதியை தீர்த்தமாகவும், பஞ்ச சபைகளில் தாமிரசபையாகவும்,  நடராஜமூர்த்தி கோயில் கொண்ட தலம் செப்பறை அருள்மிகு அழகியகூத்தர்  திருக்கோயில். மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி,  மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த சிறப்புடையது இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  தொடர்ந்து திருவிழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்பு  அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

  9-ஆம் திருநாளான இம் மாதம் 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு அழகியகூத்தர் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  10-ஆம் திருநாளான இம் மாதம் 18-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு நடன தீபாராதனையும், மாலை 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா வருதலும் நடைபெறுகின்றன.

  மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், இரவு 7.30 மணிக்கு பிற்கால  அபிஷேகமும் நடைபெறுகின்றன. இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. தேரோட்டம், திருவாதிரை நாள்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

  திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் வே.பா.ராதாகிருஷ்ணன், தக்கார்  ரா.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai