சுடச்சுட

  

  தாமிரவருணி பாசனத்தில் 45,000 ஹெக்டேரில் நெல் நடவு  மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

  By dn  |   Published on : 10th December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை  45,000 ஹெக்டேரில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது. மழை பெய்தால் மேலும் 15,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என, வேளாண் இணை இயக்குநர் கி. சௌந்திரராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

  தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் கி. சௌந்திரராஜன் கூறியதாவது: பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்றுவரும் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் பாசனப் பகுதியில் விவசாயிகள் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு 80 சதவிகிதம் நடவு முடிந்துள்ளது.

  திருநெல்வேலி கால்வாய், பாளையம்கால்வாய் பாசனப் பகுதியில் விவசாயிகள் ஆரம்ப கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம்  ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் சங்கரன்கோவில், ராதாபுரம் வட்டங்களில் நெல் சாகுபடி பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

  இப்பகுதியில் மானாவாரிப் பயிர்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறு  17,800 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காசோளம் 11,500 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் மானாவாரிப் பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மேலும் 15 ஆயிரம் ஹெக்டேரில்  நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  மழை குறைந்தது: வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்  தொடங்கியபோதிலும், தொடர்ந்து நீடிக்காமல் விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக கிடைக்காத நிலை உள்ளது. மழை பரவலாக பெய்த போதிலும், 28 சதவிகிதம் குறைவாக பெய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

  மழை குறைந்ததால் அணைகளின் நீர்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 622.71 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 224 கனஅடியும், கடனாநதி அணைக்கு 13.16 கனஅடியும், ராமநதி அணைக்கு 29.48 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

  நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் இறங்கு முகத்தில் உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 110.40 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.76 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 62.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 61.09 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 105.00 அடியாகவும் இருந்தது.

  பாசனத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து 1003.50 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 35 கனஅடியும், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தலா 45 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 68 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  3 மாதங்களுக்கு தண்ணீர் தேவை: பிசான பருவ சாகுபடி பணிகள் முழு அளவில் நிறைவு பெறவில்லை. நடவு முடிந்த பிறகு 90 தினங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இந்தச் சூழலில் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போதைய நீர்இருப்பைக் கொண்டு பாசனம், குடிநீர்த் தேவைக்கு  முழுமையாகத் தண்ணீர் வழங்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai