சுடச்சுட

  

  தமிழாசிரியர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருக்க வேண்டும்;  மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்க வேண்டும் என, தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ்த் துறை ஆகியன சார்பில், "தொல்காப்பிய எழுத்து சொல் இலக்கணக் கோட்பாடு வளர்ச்சி' என்ற தலைப்பிலான பயிலரங்கம், ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் 10 தினங்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்பயிலரங்கில், பயிலரங்க அறிமுகம், தமிழ்  இலக்கணங்கள் அறிமுகம் என்ற தலைப்பில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பேசியதாவது: தொல்காப்பியம் மிகப் பழமையான இலக்கண நூல். தொல்காப்பியம்  தமிழ் ஆற்றலை வளர்க்கும்.

  தமிழாசிரியர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருக்க வேண்டும். அறிவாற்றலை வளர்க்க  நூல்களைப் படிக்க வேண்டும். தமிழ்மொழி மீதான பற்றை, ஈடுபாட்டை அதிகரிக்க  வேண்டும். மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்க வேண்டும்.

  தொல்காப்பிய இலக்கணம் குறித்த நூலை டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில் தமிழூரில் நடைபெறும் கருத்தரங்கில் வெளியிட உள்ளேன் என்றார் அவர்.

  பயிலரங்கத் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சி. விஜயாம்பிகா தலைமை வகித்துப் பேசினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. அழகேசன் சிறப்புரை ஆற்றினார். ராணி அண்ணா கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் ஜெ. வைலட் டெல்பின் ஜெயகுமாரி வாழ்த்திப் பேசினார்.

  பயிலரங்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார்  பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும்  இருந்து பிஎச்.டி., எம்.பில். ஆய்வு மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர். பயிலரங்க  நெறியாளர் முனைவர் இரா.ச. சுகிர்தா பஸ்மத் வரவேற்றார். முனைவர் இரா. சின்னத்தாய் நன்றி கூறினார்.

  தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிலரங்கில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள், வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, எழுத்துக்களின் பிறப்பு, எழுத்துக்களின் வருகைமுறை,  தொகைகள், ஆகுபெயர், வேற்றுமைகள், சமூக உருவாக்கப் பின்புலத்தில் இலக்கணம், ஒப்பிலக்கண ஆய்வு, திணைப்பால் பாகுபாடு, எழுத்துக்களின் வரவடிவம், உரிச்சொல் விளக்கம், குறிப்பு வினை, சொல் வகைகள், எதிர்மறை அமைப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.

  டிசம்பர் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு பயிலரங்க நிறைவு விழா நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai