சுடச்சுட

  

  எலுமிச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தொடங்கினால் விளைச்சலிலும், வருமானத்திலும் ஏற்றம் பெறலாம்.

  எலுமிச்சை சிறப்புகள்: எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. உடலுக்கும், மனதுக்கும் ஒருங்கே புத்துணர்ச்சி தருகிறது. கோடையில் குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கவும், உணவுக்கு ருசி கூட்டும் ஊறுகாய் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

  சாகுபடி: பி.கே.எம். 1 ரகத்தை தேர்வு செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் சிறந்தது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் நடவு காலமாகும். வரிசைக்கு வரிசை 5 மீட்டர், செடிக்குச் செடி 5 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். இரண்டரை அடிக்கு, இரண்டரை அடி என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். நடவு செய்ததும் நீர்ப் பாய்ச்ச வேண்டும் மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். பின்னர், தேவைக்கேற்ப 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சலாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது சிறந்தது.

  உர அளவு: நடவு செய்யும்போது குழிக்கு 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு இட்டு நடவு செய்யலாம். ஓராண்டு வயது மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரத்துக்கு 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.

  ஆறாம் ஆண்டு முதல் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 30 கிலோ தொழு உரம், 1,350 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் வழங்க வேண்டும். யூரியாவை மார்ச் மாதமும், அக்டோபர் மாதமும் பாதி்ப் பாதியாக பிரித்து இட வேண்டும். தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றை அக்டோபரில் மட்டும் இட வேண்டும்.

  100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் சிங் சல்பேட் கலந்து மார்ச், ஜூலை, அக்டோபர் என ஆண்டுக்கு மூன்று முறை புதுத் தளிர் வந்ததும் தெளிக்க வேண்டும்.

  பின்செய் நேர்த்தி: நிலத்தில் இருந்து ஒன்றரை அடி உயரம் வரை உள்ள கிளைகளை அகற்ற வேண்டும். ஒவ்வொரு மரத்துக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30 கிலோ பசுந்தழைகள் இட வேண்டும். காய்ப்பு தொடங்கும் வரை பயறு வகைகள், காய்கறிகளை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்.

  வளர்ச்சி ஊக்கிகள்: பழம் பிடிப்பதை அதிகரிக்க 2-4 டி வளர்ச்சி ஊக்கியை பூக்கும் தருணத்தில் 100 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பழம் உருவான பிறகு உதிராமல் இருக்க நாப்தலின் அசிடிக் அமிலம் 3 கிராமை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

  இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றும் எலுமிச்சை சாகுபடியாளர்களுக்கு உயர்மகசூலும், உன்னத லாபமும் கிடைப்பது உறுதி. மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai