சுடச்சுட

  

  டிச.16-ல் நெல்லை, குமரி, தூத்துக்குடியில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்: தன்னார்வலர்களுக்கு அழைப்பு

  By dn  |   Published on : 12th December 2013 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது என திருநெல்வேலி மண்டல வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்தார்.

  இதுதொடர்பாக, அவர் கூறியது:

  நாடு முழுவதும் 2013-14ஆம் ஆண்டுக்கான மூன்றாவது அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்படி, திருநெல்வேலி வனக் கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வரும் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாள்களுக்கு முதல்கட்டமாக கணக்கெடுப்பு நடைபெறும். கேரளம், கர்நாடகத்திலும் இதே நாளில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. திருநெல்வேலி கோட்டத்தில் 87 அலகுகளாக கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

  இதில், 15 முதல் 20 சதுர கிலோ மீட்டர் வரையிலான தூரம் ஒரு அலகு என கணக்கிடப்பட்டு அந்த அலகில் உள்ள தாவர வகைகள், புலிகளுக்கான இரைகள், வாழ்விடம் மற்றும் புலிகளைச் சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள காரணிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், கண்டறியும் வகையிலும் இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.

  மத்திய அரசு 2006ஆம் ஆண்டு வகுத்துள்ள வனவிலங்குகள் கணக்கெடுப்பு கொள்கையின்படி நடைபெறும் இந்த பணியானது புலிகள் கண்காணிப்பு, அதனுடன் சேர்ந்து வாழும் உயிரினங்கள், உணவு, இருப்பிடம் ஆகியவற்றை கண்டறிய இது பெரிதும் உதவியாக இருக்கும்.

  வனத்துறை, அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள்,  தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் என 4 தரப்பு பங்களிப்புடன் கணக்கெடுப்பு நடைபெறும். 20 சதுர கிலோ மீட்டர் தூரமுள்ள அலகில் வன ஊழியர்கள் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

  இந்த கணக்கெடுப்பு பணிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரகர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. மீண்டும் வரும் 16ஆம் தேதி இந்த பணியில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சிக்குப் பிறகே கணக்கெடுப்புப் பணியாளர்கள் வனத்துக்குள் நுழைவர்.

  இந்த கணக்கெடுப்பில் மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்களும் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் அந்தந்தப் பகுதி மாவட்ட வனத்துறையை தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட வன அலுவலர்கள் தொலைபேசி எண்கள்: திருநெல்வேலி- 94454-68528, கன்னியாகுமரி- 94454-68537. தூத்துக்குடி மாவட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்ட வனத்துறை அலுவலரே கூடுதல் பொறுப்பாக உள்ளார் என ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai