சுடச்சுட

  

  தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை 36 சதவிகிதம் குறைவு

  Published on : 12th December 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை முந்தைய பருவத்தை விட 36 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டில் சராசரியாக 16.3 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது.

  தாமிரவருணி வடிநில பாசனத்தில் தென்மேற்கு பருவத்தில் கார் பருவ சாகுபடியும், வடகிழக்கு பருவத்தில் பிசான பருவ சாகுபடியும் செய்யப்படுகிறது. இப்பாசனத்தில்

  நீண்ட கால புள்ளி விவரங்களின்படி ஆண்டுக்கு சராசரியாக 1082 மி.மீ மழை கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சராரியாக 815 மி.மீ மழைதான் பெய்துள்ளது. கடந்த 2012 ல் சராசரியாக 754.39 மி.மீ மழை பதிவானது.

  2013 ம் ஆண்டு ஜனவரியில் 2.07 மி.மீ மழையும், பிப்ரவரியில் 98 மி.மீ மழையும், மார்ச் மாதத்தில் 81.45 மி.மீ மழையும், ஏப்ரலில் 21 மி.மீ மழையும், மே மாதத்தில் 25.71 மி.மீ மழையும், ஜூன் மாதத்தில் 63.78 மி.மீ மழையும், ஜூலையில் 17.62 மி.மீ மழையும், ஆகஸ்டில் 12.31 மி.மீ மழையும், செப்டம்பரில் 49.29 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

  அதாவது தென்மேற்கு பருவத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளது. நிகழ் பருவமான வடகிழக்கு பருவத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் 5 ம் தேதி வரை 310.68 மி.மீ மழை பெய்துள்ளது. 2012 ம் ஆண்டு வடகிழக்கு பருவத்தில் 485.8 மி.மீ மழை பெய்தது. இது முந்தைய ஆண்டை விட 36 சதவிகிதம் குறைவு ஆகும்.

  2013 ம் ஆண்டில் சராசரியாக 16.3 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2012 ம் ஆண்டில் 754.39 மி.மீ மழை பதிவாகியிருந்தது. நிகழ் 2013 ம் ஆண்டில் இதுவரை 681.91 மி.மீ மழை பெய்துள்ளது.

  பருவ மழை குறைந்த போதிலும் அணைகளின் நீர்மட்டம் 2012 ஆம் ஆண்டை விட அதிகமாக உள்ளது. 2012 ம் ஆண்டு டிச. 11 ம் தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 66.85 (100.30) அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 72.37 (108.23) அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.10 (75.05) அடியாகவும் இருந்தது.

  புதன்கிழமை (டிச. 11 ம் தேதி) அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 663 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1003.50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் 108.23 அடியாக இருந்தது.

  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 144 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 70.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாகவும் இருந்தது. நிகழ் பருவத்தில் இவ்விரு அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. தென்மேற்கு பருவத்தில் 3 முறை இந்த அணைகள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

  குளங்கள் நிரம்பவில்லை: தாமிரவருணி பாசனத்தில் 921 கால்வரத்து குளங்களும், 1342 மானாவாரிக் குளங்கள் என மொத்தம் 2449 குளங்கள் உள்ளன. இதில் 1738 குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்காததால் வறண்டுள்ளன. 10 குளங்களில் மட்டும் 3 மாதங்களுக்கு தேவையான நீர் இருப்பு உள்ளது. 141 குளங்களில் 2 மாதங்களுக்கும், 560 குளங்களில் 1 மாதத்திற்கு போதுமான நீர் இருப்பு உள்ளதாகவும்  கணக்கிடப்பட்டுள்ளது.

  சுழற்சி முறை: இப்பாசனத்தில் 45,000 ஹெக்டேர் நடவு செய்துள்ள நிலையில் இன்னும் 3 மாதங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். தற்போதைய அணைகளின் நீர் இருப்பை கொண்டு பாசனத்துக்கு முழுமையாக தண்ணீ்ர் வழங்க வாய்ப்பு இல்லை. சுழற்சி முறையில் வழங்கினால்தான் தண்ணீர் வழங்க முடியும் என்ற சூழல் உள்ளது.

  வரும் தை மாதத்தில் (ஜனவரி) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வாய்ப்புள்ளது. கோடை காலமான ஏபரல், மே மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைகளில் நீர் இருப்பு வைக்க வேண்டிய சூழல்நிலையும் உள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai