சுடச்சுட

  

  மகாகவி பாரதியாரின் 132ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பயின்ற பள்ளியில் முன்னாள் மாணவர்களும், இப்போதைய மாணவிகளும் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை சிறப்பாகப் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

  திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் அருகே ம.தி.தா.  இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மகாகவி பாரதியார் ஆங்கில வழிக் கல்வி கற்றார். அவரது நினைவாக அவர் தங்கி கல்வி பயின்ற வகுப்பறை எந்தவித மாற்றத்துக்குள்படுத்தாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் மொத்தம் 68 வகுப்பறைகள் உள்ளன.

  பாரதி பயின்ற வகுப்பறைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த வகுப்பறையில் மாணவிகள் மட்டுமே கல்வி பயிலும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பறையில் 10ஆம் வகுப்பு டி பிரிவு மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பெண் விடுதலைக்காக பாரதியார் எழுதிய கவிதைகள், பாடல்கள் இந்த வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் இடம்பெற்றுள்ளன. பாரதியார் கல்வி பயின்றபோது இருந்த வகுப்பறையின் படமும் இடம்பெற்றுள்ளது. இப்போதும் அதே படிக்கட்டுகள் வரிசையிலான வகுப்பறையே உள்ளது.

  இந்தப் பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்களும், இசைக் கலைஞர்களுமாகிய பூசைராஜ், வாசுதேவன், தியாகராஜன், முருகதாஸ் ஆகியோர் இசைக்கருவிகளை இசைக்க பள்ளியின் 6, 8, 9ஆம் வகுப்பு மாணவிகள் பாரதியாரின் பாடல்களை பாடி பரவசப்படுத்தினர்.

  கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆ. குமரவேல் சிறப்புரையாற்றினார். பள்ளி கல்விச் சங்கச் செயலர் மு. செல்லையா, பொருளாளர் தளவாய் தீ. ராமசாமி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ப.தி. சிதம்பரம், தலைமையாசிரியர் அழகிய சுந்தரம் ஆகியோர் பாரதியின் பெருமைகள் குறித்துப் பேசினர். விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சொக்கலிங்கம், கனகசபாபதி, சிவசங்கரன், பாலசுப்பிரமணியன், தங்கமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai