சுடச்சுட

  

  இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழகம் உள்ளதாக, இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ரவீந்திரன் கூறினார்.

  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கிய "நெல்லை சர்ஜிகான்-2013' கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:

  மேலைநாடுகளில்கூட இயலாமல்போன பல அறுவை சிகிச்சைகளை தமிழக மருத்துவர்கள் சிறப்பாக செய்து சாதனை புரிந்துள்ளனர். இதன்காரணமாகவே பாகிஸ்தான், அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை உள்ளது.

  தமிழகத்தில் தலை சிறந்த மருத்துவர்கள் பலர் உள்ளனர்.

  வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் மருத்துவக் கல்வி கற்று வருகின்றனர். இதனால் இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது.

  இத்தகையச் சூழலில் அறுவை சிகிச்சைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், நவீன அறுவை சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் 3 நாள் கருத்தரங்கு நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. இக் கருத்தரங்கை மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். பல்வேறு மருத்துவ துறைகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று 3 நாள்களும் உரையாற்றவுள்ளனர்.

  சனிக்கிழமை வரை கருத்தரங்கு நடைபெறவுள்ளது. நிறைவு நாளில் நவீன அறுவை சிகிச்சைகளை விடியோ மூலம் ஒளிபரப்பியும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

  இதில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai