சுடச்சுட

  

  மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: வசந்தகுமார்

  By dn  |   Published on : 13th December 2013 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூறி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஹெச். வசந்தகுமார் கூறினார்.

  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு வசந்தகுமார், திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்தார். அவருக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் பேட்டை ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மேற்கு மாவட்டத் தலைவர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கட்சி அலுவலகம் முன் உள்ள காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து வசந்தகுமார் பேசியதாவது:

  புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றவும், வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும். கோஷ்டி பூசல்களுக்கு இடம் அளிக்கக் கூடாது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான அணி அமோக வெற்றிபெற வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என லட்சியத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai