சுடச்சுட

    

    குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயைக் குணமாக்கலாம்

    By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வித புற்றுநோய்களையும் தடுக்கும் வகையில் மருத்துவத் துறை வளர்ந்துள்ளது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், நெல்லை சர்ஜிகான்-2013 என்னும் தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. 2-ம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் மோகன் பிரசாத் கூறியதாவது:

    உலகில் கிருமி சார்ந்த நோய்களான தொழுநோய் போன்றவை முற்றிலும் தடுக்கப்பட்டு வரும் நிலையில், புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்றவை அதிகரித்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான புற்றுநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. சென்னை, பெங்களுரூ பகுதிகளில் மார்பகப் புற்றுநோயும், மும்பை பகுதிகளில் வாய்ப் புற்றுநோயும், அஸாம், நாகாலாந்து போன்ற கிழக்கு மாநிலப் பகுதிகளில் உணவுக்குடல் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

    புகையிலை பழக்கம், தவறான உணவுப் பழக்கம், கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருள்களை அதிகளவில் உள்கொள்வது என புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள் 40 சதவிகிதமே உள்ளனர். இன்னும் 60 சதவிகித மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். உலகிலேயே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கான செலவுத்தொகையே மிகவும் அதிகமாக உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே புற்றுநோய்க்கான மருத்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

    பீடித்தொழிலாளர்களைப் பொருத்தவரையில், புகையிலையை எப்போதும் கையில் வைத்து நுகர்ந்து கொண்டே இருப்பதாலும், கடற்கரை பகுதியில் கருவாடு காயவைக்கும் தொழிலில் ஈடுபடும்போது துர்நாற்றத்தை சகித்துக் கொண்டே இருப்பதாலும் நுரையீரல் மற்றும் இரைப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    பிறந்த குழந்தைக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மரபு வழியாக கண்புரை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ஆகியவை குழந்தைகளைத் தாக்குகின்றன. குழந்தைகளுக்கான புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். புகையிலை போன்ற தேவையில்லாத பழக்கங்கள் குழந்தைகளிடம் இருப்பதில்லை என்பதால் நோயை விரைவில் குணப்படுத்த முடிகிறது.  அணுஉலைக்கு அருகில் வசிப்பதால் புற்றுநோய்த் தாக்கும் என்பது தவறான கருத்தாகும். புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் நவீன பரிசோதனை முறைகள் உருவாகிவிட்டன. மந்திர மாத்திரை என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் புற்றுநோய் மாத்திரை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புற்றுநோய் செல்களை மட்டுமே தாக்கி அழித்து, பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றார் அவர்.

    கருத்தரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தைராய்டு அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் எம்.என்.கமாலுதீன் பேசுகையில், தைராய்டு நோயைப் போக்க கதிர்வீச்சு அறுவைச் சிகிச்சைகளை செய்யும் வசதியை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இக் கருத்தரங்கில் மருத்துவர்கள் மனோகரன், சிதம்பரம், பத்மநாபன், சுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம், பிரகாஷ், பாண்டி பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai