சுடச்சுட

  

  நெல்லையில் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள்

  By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகர் உள்பட மாவட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

  இது தொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் பொன்னுராஜ், செயலர் கோபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

  திருநெல்வேலியில் கடந்த ஓராண்டில் மட்டும் 126 கொலைகளும், 340 கொள்ளைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். மேலும், பெண்களிடம் சங்கிலி பறிப்பதும், வீட்டை உடைத்துத் திருடுவதும் வாடிக்கையாகிவிட்டது. பெண்கள் மாலை நேரங்களில் கோயில்களுக்குச் செல்வதற்குக் கூட தயங்குகின்றனர்.

  சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்துக்கு புகார் தெரிவிக்கச் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் புகார் தருவதே இல்லை. வீடுகளைப் பூட்டிவிட்டு காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கச் சென்றால் போதுமான போலீஸார் இல்லை என்கின்றனர்.

  காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு வெளியூர் சென்றவர்கள் வீடுகளிலும் கொள்ளை நடைபெறுகிறது. கவரிங் நகையை பறிகொடுத்தவர்களை மீண்டும் மறுநாள் வந்து அதே நபர் தாக்கிச் செல்கிற சம்பவமும் நடைபெறுவது வருந்தத்தக்கது.

  இது காவல்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எனவே, இதுவரை நடைபெற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும், கொள்ளை போன நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நம்பிக்கை எற்படும். மேலும், இரவு நேரங்களில் காவல்துறையின் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

  போதுமான போலீஸாரை நியமிப்பதுடன், விரிவாக்கப் பகுதிகளில் கூடுதலாக காவல்நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் குடியிருப்போர் சங்கத்துடன் கலந்து பேசின கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர் அவர்.

  இதுதொடர்பாக, சங்க நிர்வாகிகள் அனைவரும் நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமாரை சந்தித்து வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவும் அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai