சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் அடுத்தடுத்து மூவர் வெட்டிக் கொலை

    By ஆலங்குளம்,  |   Published on : 15th December 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே சனிக்கிழமை பிற்பகல் மூன்று பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அதிகாலையில் 4 பேர் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக, 25-க்கு மேற்பட்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் சென்று நடத்திய இந்த வெறித்தாக்குதலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பூல்பாண்டியன் (50), முத்துப்பாண்டி (58). புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (25). இவர்கள் மூவரும்  சிவலார்குளம் விலக்குப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனராம்.

    சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அந்தத் தோட்டத்துக்குள் சென்ற 5 பேர்  கொண்ட மர்ம கும்பல், மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதற்கிடையே, குத்தப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிவலார்குளத்தைச் சேர்ந்த முருகையா மகன் இசக்கி (35) என்பவரையும் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. இதில் அவர் காயமடைந்தார்.

    மேலும், அந்தக் கும்பல் அங்கு நின்றிருந்த ஒரு காருக்கு தீவைத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் ஒன்றை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மூவர் வெட்டிக் கொலை: இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, ஆலங்குளம் பகுதியில்  அடுத்தடுத்து வன்முறை நடந்தது. ஆலங்குளம் நல்லூர் காமராஜர்நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் வைத்திலிங்கம் (47), அவரது உறவினர் அய்யனார்குளத்தைச் சேர்ந்த நயினார் மகன் பூராசா (68) என்பவருடன் சனிக்கிழமை பிற்பகல் அவரது வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் வீடு புகுந்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இதற்கிடையே, காசியாபுரத்தைச் சேர்ந்த திரவியம் மகன் செல்வராஜ் (53) என்பவர், கண்டபட்டி அருகே அவருக்குச் சொந்தமான கல்குவாரியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு 8 மோட்டார் சைக்கிள்களில் 25-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சென்று அவரை சூழ்ந்தனர். அதிர்ச்சியடைந்து தப்பி ஓட முயன்ற அவரையும் அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலையுண்ட பூராசாவுக்கு மனைவி, 4 மகள்கள், 2 மகன்களும், வைத்திலிங்கத்துக்கு ரெஜினா என்ற மனைவி, 2 மகன்கள், 2 மகள்களும், செல்வராஜுக்கு 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

    தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக இந்தப் படுகொலைகள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகளைத் தொடர்ந்து, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

    திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், ஏ.டி.எஸ்.பி. ராஜகோபால், ஆலங்குளம்  டி.எஸ்.பி. பிச்சை, இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் சனிக்கிழமை இரவு ஆலங்குளத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    நல்லூர், கண்டபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai