சுடச்சுட

  

  தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமுக்குச் செல்ல நெல்லை, குமரி, தூத்துக்குடியில் தயாராகும் 11 யானைகள்!

  By திருநெல்வேலி,  |   Published on : 15th December 2013 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள திருக்கோயில், மடங்களுக்குச் சொந்தமான 11 யானைகளை நலவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

  இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கவும், யானைகளை உற்சாகப்படுத்தி நல்ல மனநிலையில் வைத்திருக்கவும் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

  இம் முகாமில் மாநிலம் முழுவதும் வரும் யானைகளுடன் சுதந்திரமாகப் பழகி உற்சாக குளியல், பல்வேறு வகையான உணவுகளை யானைகள் ருசித்து  மகிழும். இயற்கை எழில் சூழந்த பகுதிகளிலேயே முகாம் நடைபெறுகிறது. கடந்தாண்டு நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி 13 வரை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டது.

  இதேபோல, நிகழாண்டும் தேக்கம்பட்டியில் நலவாழ்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 11 யானைகள் தயார்படுத்தப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் ம. அன்புமணி மேற்பார்வையில் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

  அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, இலஞ்சி குமரன் கோயில் யானை வள்ளி, சங்கரன்கோவில் யானை கோமதி, ஆழ்வார் திருநகரிக்குள்பட்ட கோயில்களின் 3 பெண் யானைகள், திருக்குறுங்குடி மடத்துக்குச் சொந்தமான 2 பெண் யானைகள், திருச்செந்தூர் கோயிலில் உள்ள தலா ஒரு பெண் மற்றும் ஆண் யானை, கன்னியாகுமரி தேவஸம்போர்டுக்கு சொந்தமான குழித்துறை கோயில் யானை கோபால் என மொத்தம் 11 யானைகளுக்கு லாரிகளில் ஏறி, இறங்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெண் யானை காந்திமதிக்கு 40 வயது ஆகிறது. பரிவர்த்தனை அடிப்படையில் வனத்துறையிடமிருந்து 2.2.1984-ல் 11 வயது குட்டியாக காந்திமதி அழைத்து வரப்பட்டது.

  இந்த யானையை பாகன் பாலகிருஷ்ணன் தலைமையிலான ராம்தாஸ், விஜயகுமார் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

  நலவாழ்வு முகாமுக்கு லாரியில் அழைத்துச் செல்லப்படவுள்ளதால் லாரியின் ஏறி, இறங்கவும், லாரியில் நின்றபடி பயணம் செய்யவும் பயிற்சி அளிக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி கலையரங்கின் மேடையிலிருந்து லாரியில் ஏறவும், இறங்கவும், மேடைக்கு படிகள் வழியாக ஏறி, இறங்கவும் பாகன்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர். லாரியின் ஏறும்போது பின்புறமாக ஏறி பின்னர் முன்புறமாக திரும்பும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற காந்திமதிக்கு கரும்பு, காய்கனிகள், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் நிர்வாக அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai