சுடச்சுட

  

  அச்சன்கோவில் திருவாபரணப் பெட்டி தென்காசி வருகை

  By தென்காசி  |   Published on : 16th December 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அச்சன்கோவில் திருவாபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

  ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மண்டல மகா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இவ்விழாவையொட்டி ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் பலகோடி மதிப்பிலான நகைகள் கேரள மாநிலம், புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும். கருவூலத்திலிருந்து ஐயப்பனின் நகைகள் அடங்கிய திருவாபரணப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது.

  தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் முன் திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  கேரள தேவசம்போர்டு உதவிஆணையர் மது, அச்சன்கோவில் ஐயப்பன் கோயில்  செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள போலீஸார் உடன் வந்தனர். காசிவிஸ்வநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருவாபரணப் பெட்டி கொண்டுசெல்லப்பட்டது.

  முன்னதாக, திருவாபரணப் பெட்டிக்கு வரவேற்பு கமிட்டி சார்பில், கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.குருசாமி, செயலர் மாடசாமி, பொருளாளர் தங்கவேல், அமைப்புச் செயலர்கள் மணி, சுப்புராஜ், அரிகரன், ஐயப்பசேவா சங்கத் தலைவர் மாரிமுத்து, கே.எஸ்.ராமன், திருநாவுக்கரசு, வி.எம்.முருகன், திருமலைக்குமாரசாமி, திருப்பதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை காலையில் 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தினந்தோறும் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறும்.

  விழாவின் 9-ஆம் நாளான 24-ஆம் தேதி தேரோட்டமும், 25-ஆம் தேதி ஆராட்டு விழாவும் நடைபெறுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai