சுடச்சுட

    

    ஆறு, கால்வாய்களில் அடிக்கடி சிக்கும் மலைப்பாம்புகள்: பொதுமக்கள் அச்சம்

    By திருநெல்வேலி,  |   Published on : 16th December 2013 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகரில் ஆறு, கால்வாய்களில் அடிக்கடி மலைப்பாம்புகள் பிடிபடுகின்றன. மலைப்பாம்புகளின் நடமாட்டத்தால் அவற்றில் மக்கள் அச்சத்துடன் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு பெயர்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான  மலைப்பாம்புகள் உள்ளன. இந்த மலைப்பாம்புகள் தாமிரவருணி நதியின் வழியே நகர்ப்புறங்களுக்குள் புகுந்துவிடுவது அதிகரித்துவருகிறது.

    தாமிரவருணியில் 1992-ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்புக் குட்டிகள் இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆற்றங்கரையோரம் தங்கி ஏராளமான முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறித்துள்ளதால் வாரந்தோறும் ஏதேனும் ஒரு பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் மலைப்பாம்புகள் பிடிபடும் சூழல் இப்போதும் காணப்படுகிறது.

    கால்வாய்களிலும் புகுவதால் ஆபத்து: தாமிரவருணி நதியின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் நதியுன்னி, கன்னடியன், பாளையங்கால்வாய் உள்பட 7 கால்வாய்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கால்வாய்களும் உள்ளன. தடுப்பணைகளில் இருந்து பிரிந்து செல்லும் இந்தக் கால்வாய்களுக்குள்ளும் மலைப்பாம்புகள் புகுந்துவிடுகின்றன. இந்த நதியின் தொடக்கத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும்  மேற்பட்ட மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன.

    நதிகளில் கிடக்கும் மலைப்பாம்புகளைவிட கால்வாய்களுக்குள் புகும் மலைப்பாம்புகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் இடத்தில் ஆள்களை விழுங்கும் மலைப்பாம்பு நடமாட்டம் இருப்பது மிகவும் அச்சுறுத்தலானது.

    குறிச்சியில் மலைப்பாம்பு: திருநெல்வேலி குறிச்சி பாளையங்கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பாம்புக் குட்டி கிடப்பது தெரியவந்தது. அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அந்தப் பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த பாம்புக் குட்டியின் தாய் பாம்பு இந்தக் கால்வாய்க்குள் கிடக்குமோ என்ற அச்சம் அப் பகுதி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    அறவே ஒழிப்பது இயலாது: இதுகுறித்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர் சுதன் கூறியதாவது:

    திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரை கருப்பந்துறை, கொக்கிரகுளம்,  வண்ணார்பேட்டை பகுதிகளில் ஏராளமான புதர்கள் காணப்படுவதால், வெள்ளத்தின்போது வந்த பல மலைப்பாம்புக் குட்டிகள் சிக்கி, இப்போது பெரிய உருவில் காணப்படுகின்றன. பெரும்பாலும் 30  ஆண்டுகள் வரை வாழ்நாள் கொண்ட மலைப்பாம்புகள், ஆற்றங்கரையோரம் தங்கி பெருச்சாளி, மீன்கள், கோழி போன்றவற்றை பெரும்பாலும் சாப்பிடுகின்றன. நீர்வாழ் பறவைகள் கிடைத்தாலும் தனது இரையாக்கிக் கொள்கின்றன. ஆடுகள், கன்றுக்குட்டிகளை கொன்று விழுங்கும் பெரிய வகையிலான மலைப்பாம்புகளும் தாமிரவருணியில் உள்ளன.

    நதியில் உள்ள மலைப்பாம்புகள் அனைத்தையும் கண்டுபிடித்து, மலைப்பகுதிக்குள் கொண்டுவிடுவது இயலாத காரியமாகும். அதிலும் குறிப்பாக மலைப்பாம்புகளிலும்  தண்ணீரின் அருகிலேயே பிறந்து வளர்ந்த பாம்புகளை வெப்பம் மிகுந்த காடுகளில் விட்டால் அவை தானாகவே தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிதான் வரும்.

    பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் கீழ் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெரிய அளவிலான சுமார் 30 மலைப்பாம்புகள் பிடித்து காடுகளில் கொண்டு விடப்பட்டுள்ளன. கொக்கிரகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பு சிக்கியது. எங்களது தீயணைப்பு நிலையத்தின் கீழ் பிடித்த பெரிய வகை பாம்பு இதுதான் என்றார்.

    அமலைச்செடிகளை அகற்ற வேண்டும்: இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறுகையில், கால்வாய்களில் படர்ந்துள்ள அமலைச்செடிகளுக்கு மத்தியில் மலைப்பாம்புகள் பதுங்கிக் கிடக்கின்றன. எனவே, கால்வாய்களில் அமலைச் செடிகளைத் தேங்கவிடாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai