சுடச்சுட

    

    ஆலங்குளம் அருகே மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலங்குளம் அருகே சனிக்கிழமை அதிகாலையில் சிவலார்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன், முத்துப்பாண்டி, கோபால், இசக்கிமுத்து ஆகியோரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, ஆலங்குளம் நல்லூரைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ், அதே ஊரைச் சேர்ந்த வைத்திலிங்கம், அய்யனார்குளம் பூராசா ஆகியோர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லூரில் கடைகள் அடைக்கப்பட்டன.

    டி.ஐ.ஜி. சுமித் சரண், எஸ்.பி. விஜயேந்திர பிதரி, ஆலங்குளம் டி.எஸ்.பி. பிச்சை,  இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் சனிக்கிழமை இரவு ஆலங்குளம் வந்து  போலீஸாருடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஆலங்குளம், காசியாபுரம்,  சிவலார்குளம், நல்லூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்போடு சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

    20 பேர் கைது: கொலைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கொலைகள் தொடர்பாக சிவலார்குளத்தைச் சேர்ந்த மு. முருகன், ச. அருண்சுரேஷ் (32), மு. நடராஜன் (32), மு. மனோ (19), இ. முருகன் (37), மு. முப்புடாதி என்ற குமார் (35), ச. வினோத் (21), ச. முருகன் (34), செட்டிக்குறிச்சியை சேர்ந்த ச. ஆறுமுகம் (55), மு.சுந்தர் (50), ரா.சுப்புராஜ், க. பாலசுப்பிரமணியன் (40), ரா. மாரியப்பன் (36), மு. முருகன் (47), ச. சோமு (65), சோ. மருதய்யா (30), பொன்னுசாமி (40), மு. சுப்பையா, சு. ஆனந்த் (20), வே. முத்துக்குட்டி (35) ஆகிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பூல்பாண்டியன் உள்ளிட்ட 4 பேரை வெட்டிய வழக்கு தொடர்பாக ஆலங்குளத்தைச்  சேர்ந்த ல. அஷ்ரப்அலி (30), பா. சொரிமுத்து (31), சு. செல்வகுமார் (31), சு. பிரபாகரன், து. சொரிமுத்து என்ற குட்டி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    போலீஸ் கட்டுப்பாட்டில்... இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான  நல்லூர், காசியாபுரம், சிவலார்குளம் பகுதிகளில் 5 டி.எஸ்.பி.க்கள், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடிப்படை போலீஸார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலங்குளம் பிரதான சாலை முழுவதும் போலீஸார் மற்றும் போலீஸ் வாகனங்களே  பெரும்பகுதியை ஆக்கிரமித்த நிலையில் உள்ளன. இங்குள்ள திருமண மண்டபம், மார்க்கெட், பஸ் நிலையம், கோயில் வளாகம், அம்பாசமுத்திரம் சாலை, பிரதான சாலை என சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, தென்காசி- திருநெல்வேலி பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. தென்காசி-திருநெல்வேலி பேருந்துகள் ஆலங்குளத்தில் இருந்து இடைகால், பேட்டை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. கார்களும், தனியார் வேன்களும் பிரதான சாலை வழியே செல்ல அனுமதிக்கப்படாததால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். பிற்பகலுக்கு பின்னர் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai