சுடச்சுட

    

    இடைத்தேர்தலால் மக்களுக்கான திட்டங்கள் முடக்கம்: இந்திய தேசிய லீக்

    By திருநெல்வேலி  |   Published on : 16th December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடைத்தேர்தல் நடத்துவதால் 3 மாதங்கள் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் முடக்கி வைக்கப்படுகிறது. ஆகவே இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அதன் மாநில அமைப்புச் செயலர் எம்.ஏ. சீனிஅகமது கூறியதாவது: மக்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்குவது போல், மாற்றுத்திறனாளிகளை முழுமையாக கணக்கெடுத்து,  அனைவருக்கும் மோட்டார் வாகனம் இலவசமாக வழங்க வேண்டும். ஓரினச் சேர்க்கை குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.

    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை இந்திய தேசிய லீக் ஆதரிக்கும். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகும். இடைத்தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடைபெறும் மாவட்டத்தில் 3 மாதங்கள் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கி வைக்கப்படுகிறது. ஆகவே இடைத்தேர்தல் நடத்தாமல், அந்த தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சியின் வேட்பாளரையே தேர்வு செய்து அறிவிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேசிய லீக் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார் அவர்.

    கூட்டத்தில் மாநிலச் செயலர் செய்யதுஜஹாங்கிர், மாநில இளைஞரணி துணைச் செயலர் எஸ்.எச். முகம்மதுநவாஸ், மாநில வர்த்தக அணிச் செயலர் சித்திக்ராஜா, தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பால்குளம் பாலன், செய்தி தொடர்பாளர் ராஜாஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்களாக கே.எஸ். புகாரி, முகம்மதுயூசுப், கே. இம்தியாஸ், சாகுல்ஹமீது, ராஜாஷேக்முகைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai