சுடச்சுட

  

  இளைஞர்கள் விஞ்ஞானம் படித்தாலும், விவசாயத்தை மறக்கக் கூடாது,  நேசிக்க வேண்டும் என நடிகர் விவேக் குறிப்பிட்டார்.

  திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிரீன் குளோப் அமைப்புகள் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி, தலைமை வகித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:

  நகைச்சுவை மூலம் மக்களிடையே பகுத்தறிவு சிந்தனைகளை நடிகர் விவேக் கூறி வருகிறார். பகுத்தறிவு கருத்துக்களை தெரிவிப்பதில் தந்தை பெரியாரின் வாரிசாக அவர் திகழ்கிறார்.

  முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த தினத்தையொட்டி தமிழகத்தில் மரக்கன்றுகளை நட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். கிராம உதயம் அமைப்பின் சேவை மகத்தானது என்றார் அவர்.

  நடிகர் விவேக் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 20.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து வந்த நான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதயம் அமைப்பின் மூலம் விவசாயிகளை சந்தித்து மரக்கன்றுகள் வழங்கி வருகிறேன்.

  50 ஆண்டுகளுக்கு முன், வெளியே சென்றால் சட்டை கசங்காமல் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் வெளியே சென்றால், சட்டை நிறம் மாறி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அந்தளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது.

  வெப்பம் அதிகரித்து, குளிர்ச்சி குறைந்த காரணத்தால் மழை இல்லை. மழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீராதாரம் இல்லை. விவசாயம் அழிந்து வருகிறது. விளை நிலங்களை விற்கும் நிலை மாற வேண்டும். ரசாயன உரங்களால், மண்ணின் தன்மை மற்றும் தழைச்சத்துக்களை இழந்து விட்டோம். விஞ்ஞானத்தை நோக்கி செல்லும் இளைஞர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும். விளைநிலங்கள் தலைமுறை தலைமுறையாக நம்மை வாழ வைக்கும்.

  மரங்கள் ஆக்சிஜனைத் தருகின்றன. அதன் மூலம் மாசற்றக் காற்றை சுவாசிக்க முடியும். இங்குள்ள மக்கள் உழைப்பாளிகள். தமிழ்பண்பாட்டை வளர்த்த தாமிரவருணி என்றார் அவர்.

  கிராம உதயம் இயக்குநர் வி. சுந்தரேசன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் அருணாசலம், துணைத் தலைவர் மாரிமுத்து, வழங்குரைஞர் சங்கத் தலைவர் கருப்பசாமி, அதிமுக நகரச் செயலர் பால்துரை, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, கிராம உதயம் மேலாளர் தமிழரசி, தன்னார்வத் தொண்டர்கள்  முத்துராஜ், ராஜேந்திரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai