சுடச்சுட

    

    படைப்பாளிகளிடம் சமூக அக்கறை குறைந்து வருகிறது

    By திருநெல்வேலி,  |   Published on : 17th December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    படைப்பாளிகள் சமூகப் பிரச்னைகளில் இருந்து விலகிச் செல்லும் நிலை உள்ளது; காதல் கவிதை எழுதுவது மட்டும் படைப்பாளியின் பணி அல்ல; சமூக அக்கறையுடன் படைப்புகள் இருக்க வேண்டும் என, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மதுமீரான் குறிப்பிட்டார்.

    பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த் துறை, புதுக்கோட்டை உலகத்  தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம்,  தென்காசி தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம், ஈரோடு ஆய்த எழுத்து பன்னாட்டுத்  தமிழியல் ஆய்விதழ் ஆகியவை சார்பில், "தமிழ் இலக்கியத்தில் களமும் கருத்தியலும்'  என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் தூய சவேரியார் கல்லூரியில்  திங்கள்கிழமை நடைபெற்றது.

    கருத்தரங்கை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் பேராசிரியர் சொ. சுப்பையா தொடங்கிவைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் வி. கில்பர்ட் கமிலஸ்  தலைமை வகித்தார். கலைமனைகளின் அதிபர் டேனிஷ் பொன்னையா வாழ்த்துரை வழங்கினார்.

    தொ.பரமசிவன்: கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் தொ. பரமசிவன் பேசியதாவது: தமிழ் இலக்கியங்கள் சமூகம் சார்ந்தவை. சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு உலக அரங்கில் மரியாதையை பெற்றுத் தந்துள்ளன. இலக்கியத்தின் புதிய பார்வை, பரிமாணம் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

    புதிய கருத்தின் மூலம் பழமையைப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் சார்ந்த, களம் சார்ந்த இலக்கியப் பார்வை தமிழின் பக்கம் திரும்பியுள்ளது. உலகின் முதல்  அகராதி தொல்காப்பியம் என அமெரிக்க அறிஞர் குறிப்பிடுகிறார். தமிழ் இலக்கிய ஆய்வுகள் மக்களுக்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்றார் அவர்.

    ப.வேணுகோபால்: சிங்கப்பூர் தேசியக் கல்வியியல் புலம் அமைப்பின் பேராசிரியர் ப. வேணுகோபால் பேசியதாவது: மேலைநாட்டு அறிஞர்கள் அவர்கள் சார்ந்த நாட்டு மொழியில் தமிழ் மொழியின் தொன்மையை ஆய்வு செய்து மொழியின் பெருமையை எழுதியுள்ளனர். இதனை தமிழர்கள் உணர வேண்டும். வாழ்வியல் இலக்கணத்தை கற்றுத் தந்த தமிழன், இப்போது தமிழ் மொழியை மறக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும். தமிழர்கள் மொழிப்பற்றில் இருந்து விலகிச் செல்லக் கூடாது என்றார் அவர்.

    தோப்பில் முகம்மதுமீரான்: கருத்தரங்க சிறப்பு மலரை வெளியிட்டு, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மதுமீரான் பேசியதாவது: தமிழ் மொழியில் உள்ள கருத்துக்கள் வேறு எந்த மொழியிலும் கிடையாது. தமிழ் நூல்களை பிற நாட்டினர் அதிகம் நேசிக்கிறார்கள். பழமையான நூல்களை ஆழமாகப் படித்து உணர்ந்து எழுதியுள்ளனர். ஜெர்மன் நாட்டு அறிஞர் பழமையான தமிழ் நூல்களை ஆய்வு செய்துள்ளார். தமிழர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம்.

    தமிழ் இலக்கியத்தில் புதிய பார்வை, புதிய ஆய்வுகள் வேண்டும். பாரதியாரை நாம் ஓர் அளவுகோலாகத்தான் வைத்திருக்கிறோம்; இந்த நிலை மாற வேண்டும். தாழ்வு மனப்பான்மையால் தமிழர்கள் பின்னோக்கிச் செல்லும் நிலை உள்ளது.

    காதல் கவிதை எழுதுவது மட்டும் படைப்பாளியின் பணி அல்ல. சமூக அக்கறையுடன் படைப்புகளைத் தர வேண்டும். சமூகப் பிரச்னைகளில் இருந்து படைப்பாளிகள் விலகிச் செல்லும் நிலை உள்ளது.

    கூடங்குளம் அணுஉலையின் தீங்கு, குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரவருணித்  தண்ணீர் வழங்குவது போன்ற சமூகப் பிரச்னைகளை படைப்பாளிகள் சுட்டிக்காட்ட  வேண்டும் என்றார் அவர்.

    கருத்தரங்கில் சிங்கப்பூர் பாடத்திட்ட வரைவு அதிகாரி பொன். சசிகுமார், இலங்கை எழுத்தாளர் அஷ்மத், சிங்கப்பூர் கல்வி அமைச்சு மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய பேராசிரியர் ஆர். விமலன், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க துணைத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர்  நா. ராமச்சந்திரன், சிங்கப்பூர் நன்னியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக முனைவர் சீதாலட்சுமி, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா, தமிழ்த் துறை முன்னாள் தலைவர்கள் பொ.செ. பாண்டியன், அ.ச. ராமையா, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மைய பொருளாளர் செ.மு. கமால் உள்பட பலர் பேசினர்.

    கருத்தரங்கில் தமிழறிஞர்கள், இலங்கை, சிங்கப்பூர் வாழ் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ஆ. மணி வரவேற்றார். கருத்தரங்கச் செயலர் வ. ரில்பர்ட் ஜெனார்த்தனன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai