சுடச்சுட

    

    தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம் 6 மாதத்துக்குள் திறக்கப்படும்?

    Published on : 18th December 2013 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி தச்சநல்லூர் மேம்பாலப் பணி தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதத்துக்குள் பணிகள் நிறைவுபெற்று பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமும் ஒன்றாகும். இந்த ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு வாராந்திர ரயில்களை சேர்த்து 50 முதல் 68 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றின் பராமரிப்புப் பணிக்காக ரயில் நிலையத்தில் பிட் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஒவ்வொரு ரயில் வரும்போது மட்டுமன்றி, பிட்லைனில் ரயில்கள் நிறுத்தப்படும்போதும் தச்சநல்லூரில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம்.

    ஏ கிரேடு (பி கிரேடில் அதிக ரயில் வராததால் ஊழியர்கள் 12 மணி நேரம் பணியாற்றுவர்) அந்தஸ்தில் உள்ள தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் நாள் ஒன்றுக்கு 3 பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட முறை இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. இன்டர்லாக் முறையில் இந்த கேட் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் சிக்னலுக்கு தகுந்தவாறும், ரயில்வே கேட்டில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு ரயில் கடந்து சென்றபின்புதான் கேட்டை திறக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தினந்தோறும் காத்திருப்பு: ரயில் வரும் நேரத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோரும், குறிப்பாக மாலை நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் காத்திருக்க நேர்ந்து அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.

    தச்சநல்லூர், ஊருடையார்குடியிருப்பு, பாலாஜி அவென்யூ, சிவன்கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, அக்ரஹாரம் பகுதி மக்கள் தினந்தோறும் ரயில்வே கேட்டில் காத்திருக்காமல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ரூ.29.12 கோடியில் பாலம்: இதையடுத்து, இந்தப் பகுதியில் ரூ.29.12 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை, கிராம சாலைகள் திட்டம், நபார்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி பெற்று இந்த மேம்பாலம் மற்றும் சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2011-ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேம்பாலப் பணிகள் தொடங்கின.

    தச்சநல்லூர் சிவன்கோவில் அருகே தொடங்கி சுமார் 650 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் கீழ் தச்சநல்லூர் பகுதியில் 10 தூண்களும், பாலபாக்கியாநகர் பகுதியில் 14 தூண்களும் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ஒரு மாதத்தில் முடிவடையும்: இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், தச்சநல்லூர் மேம்பாலத்தில் 600 மீட்டர் நீளம் வரைதான் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நடுவே ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதியில் 2 தூண்களை அமைத்து 50 மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைப்பது ரயில்வே நிர்வாகத்தின் பணியாகும்.

    கடந்த 2012 முதல் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை 24 தூண்களின் உதவியுடன் அமைக்கப்படுகின்றன. தச்சநல்லூர் பகுதியில் இன்னும் 2 தூண்களை இணைக்கும் வகையில் கான்கிரீட் இணைப்பு மட்டுமே போடப்பட வேண்டியுள்ளது. மற்றொரு புறத்தில் பாலத்தின் கான்கிரீட் பணிகள் முடிந்து பாலத்தின் தொடக்கத்தில் மண் குவித்து சாலை அமைப்பதற்கு ஏற்ப சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினமும் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதால், இன்னும் ஒரு மாதத்திற்குள் நெடுஞ்சாலை துறை சார்ந்த பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது. அதன்பின்பு அணுகுசாலை, வடிகால் வசதி, சாலை வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி போன்றவற்றுக்கு தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்றனர்.

    கட்டுமானப் பிரிவினரே பொறுப்பு: இதுகுறித்து ரயில்வே துறையினரிடம் கேட்டபோது, ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து கட்டுமானப் பிரிவுக்குதான் தெரியும். இதுவரை அந்தத் துறையின் சார்பில் எவ்வித தகவலும் திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் முழுவதும் முடிந்த பின்பே ரயில்வே துறையின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளன. திருநெல்வேலி சந்திப்புக்கு தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்ல வேண்டியுள்ளது.

    அவை அனைத்தையும் வேறு மார்க்கங்களில் இயக்குவது கடினம். எனவே, 50 மீட்டர் தொலைவுள்ள பாலத்தை ஒரு சில வாரங்களிலேயே முடிக்க ஏதுவாகவே ரயில்வேயின் திட்டம் இருக்கும். எனவே, தாமதம் ஏற்படாமல் தொடர்ச்சியாக பணிகளைச் செய்து முடிக்கவே கட்டுமானப் பிரிவிடம் திருநெல்வேலி ரயில் நிலையம் சார்பில் கோரப்படும் என்றனர்.

    நெடுஞ்சாலை, ரயில்வே பணிகள் அனைத்தும் முடிந்து எப்படியும் இன்னும் 6 மாதங்களுக்குள் தச்சநல்லூர் மேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai