சுடச்சுட

    

    சாகித்ய அகாதெமி விருதுக்கு "கொற்கை' நாவல் தேர்வு கடற்கரை சமூகத்துக்கு கிடைத்த அங்கீகாரம்: ஜோ டி குருஸ் பெருமிதம்

    By திருநெல்வேலி  |   Published on : 19th December 2013 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ டி குருஸ் (51) எழுதிய "கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரமாகப் பயின்றவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பில். பயின்றார்.

    இவர் ஏற்கெனவே "ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலுக்கே சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது "கொற்கை' நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    கடல்வாழ் மக்களின் கதையை எடுத்துக்கூறும் வகையில் இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது முத்துக்குப் பெயர்பெற்ற இப்போதைய தூத்துக்குடி கொற்கை துறைமுகத்தில் 1914-ல் தொடங்கும் கதை, 2000-ஆம் ஆண்டில் நிறைவுபெறுவதைப்போல எழுதியுள்ளார். முழுவதும் கடல் சார்ந்தும், உப்புக் காற்று, மீன் வாசனை, முத்து வணிகம், கப்பல் வணிகம், கொற்கையில் பிரசித்திபெற்று விளங்கிய தொழில்கள் ஆகியவை இந்த நாவலில் அழகுற இடம் பெற்றுள்ளன.

    இதுமட்டுமன்றி, நாவலில் இடம்பெறும் காலத்தில் கொற்கையிலிருந்த ஆங்கிலேயர்கள், கத்தோலிக்கப் பிரதிநிதிகள், அரசியல் சூழல்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஏராளமான கதாபாத்திரங்களுடன் இந்த நாவலை படைத்துள்ளார்.

    சாகித்ய அகாதெமி விருதுக்கு கொற்கை நாவல் தேர்வானது குறித்து ஜோ டி குருஸிடம் "தினமணி' செய்தியாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியது: விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. பணி நிமித்தமாக இலக்கிய வட்டத்துடன் பெரிதாக எனக்குத் தொடர்பில்லை. இருப்பினும், நான் வாழ்ந்த  சூழலை, அங்கு நிலவியவற்றைப் பதிவு செய்வதற்காக இரு நாவல்களை எழுதியுள்ளேன். 2004-ல் "ஆழிசூழ் உலகு' வெளியானது. 2009 டிசம்பரில் "கொற்கை' நாவலை வெளியிட்டேன். மூன்றாவதாக கப்பல் சார்ந்த மற்றொரு நாவலை எழுதவுள்ளேன்.

    எனது "கொற்கை' நாவல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு பெற்றிருப்பதை, கடற்கரை சமுதாயத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். இதன்மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை (மேல்தட்டு சமூகம்) கடற்கரை சமுதாயத்தின் மீதும், நீர்தேவதையின் மக்கள் மீதும் திரும்பும் என நினைக்கிறேன் என்றார் அவர்.

    இவருக்கு மனைவி சசிகலா, 6-ஆம் வகுப்பு படிக்கும் மகன் அந்தோனி டி குருஸ், 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமா டி குருஸ் ஆகியோர் உள்ளனர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சென்னையில் வணிகக் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் என்டிசி லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai