சுடச்சுட

  

  தமிழக அரசுத் திட்டங்களில் மகளிருக்கு முக்கியத்துவம்

  By திருநெல்வேலி,  |   Published on : 19th December 2013 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் அரசு திட்டங்களில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் கூறினார்.

  திருநெல்வேலியில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி மேயரும், மாநகர் மாவட்ட மகளிரணிச் செயலருமான விஜிலா சத்யானந்த் பேசியதாவது:

  தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்களில் மகளிரே அதிகளவில் பயன்பெறுகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியே இதற்கு பெரிதும் சான்றாக அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல், மடிக்கணினி வழங்குதல், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்துக்கு உதவித் தொகை, திருமண உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம், ஆடு, மாடுகள் வழங்குதல், பசுமை வீடுகள் உள்ளிட்ட அனைத்துமே மகளிருக்காகக் கொண்டுவரப்பட்டவையே.

  எனவே, தமிழக பெண்கள் எப்போதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதிமுக மகளிரணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தலா 100 பெண்களை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் எஸ். முத்துக்கருப்பன் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கழகத்தின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துமாறு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி ஒவ்வொரு அணியாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 28 ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் மாவட்ட மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மகளிரணி மட்டுமல்லாது கட்சியின் இதர அனைத்து நிர்வாகிகளும் இக் கூட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  இக்கூட்டத்தில் துணை மேயர் ஜெகநாதன், மண்டலத் தலைவர்கள் மாதவன், எம்.சி. ராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் சுதா பரமசிவன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai