சுடச்சுட

  

  நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 470 வங்கிகளில் பணப் பரிவர்த்தனை முடங்கியது

  By திருநெல்வேலி  |   Published on : 19th December 2013 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் புதன்கிழமை நடைபெற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேலைநிறுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 470 வங்கிகளில் பணப் பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது.

  ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பப்படாததால் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

  வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து 13 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.  கடந்த 14, 16-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

  இதையடுத்து, ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிவு செய்யவேண்டும். பொதுத்துறை வங்கிகளில் தனியார் ஆதிக்கத்துக்கு இடமளிக்கக் கூடாது. வங்கிகள் சீரமைப்பு மசோதா என்ற பெயரில் வங்கிகளை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் முதலீட்டை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கியக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரியும் 800 பெண்கள் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆர்ப்பாட்டம்: வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலர் ஆர். ரெங்கன் தலைமை வகித்தார். தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கில்பர்ட், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முருகன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் முத்தையா, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் ஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

  ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களிலும் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளாததால் பெரும்பாலான மையங்கள் செயல்படவில்லை. இதன்காரணமாக பொதுமக்களும், வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

  தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 160 வங்கிகளைச் சேர்ந்த 1,640 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் இம் மாவட்டத்தில் ஏறத்தாழ ரூ.100 கோடி வரை பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 வங்கிகளின் 150 கிளைகள் உள்ளன. இவற்றில் 950 அதிகாரிகள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai