சுடச்சுட

  

  விவசாயிகள் சாதாரண பயிர் சாகுபடியோடு நின்றுவிடாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து பல்வகை சாகுபடிகளை மேற்கொண்டு, வாய்ப்புள்ள வேளாண் உபதொழில்களையும் செய்து உயர் லாபமும், உன்னத வருமானமும் பெறலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

   இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிர மணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி. இப் பழமொழி வெறுமனே ஒற்றைப் பயிர் சாகுபடியை மட்டுமே கடமையே என மேற்கொள்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் வணிகப் பயிர்கள் உள்ளிட்ட பல்வகைப் பயிர்ச் சாகுபடியை நவீன உயர் தொழில் நுட்பங்களுடன் மேற்கொள்வதுடன், வேளாண்மையின் உபதொழில்களையும் சேர்த்து செய்து ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொள்வதன் மூலம் விவசாயி வெற்றிகரமான விவசாயமாக செய்ய முடியும். உயர் லாபமும், உன்னத வாழ்வும் பெற முடியும்.

  ஒருங்கிணைந்த பண்ணையம்: உணவுக்கு நெல் உற்பத்தி செய்யும் விவசாயி, வேளாண்துறை கூறும் திருந்திய நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடித்து, குறைந்த நீரில் குறைந்த பரப்பில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். எஞ்சிய பரப்பில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் அன்றாட, வாராந்திர வருமானம் ஈட்டும் காய்கறி சாகுபடி செய்யலாம். மலர் சாகுபடி செய்யலாம். பழமரப் யிர்கள் சாகுபடி செய்து நீண்ட கால வருவாய்க்கும் வழி கோலலாம். அவற்றிடையே தேனிப் பெட்டிகள் வைத்து, தேனி வளர்ப்பு மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து, நல்ல தேனும் உற்பத்தி செய்யலாம். வணிகப் பயிராக வாழை சாகுபடி செய்யலாம்.

  இப் பயிர்களுக்கு தமிழக அரசு தரும் மானியத்தைப் பயன்படுத்தி நுண்ணீர்ப் பாசனம் அமைத்து இருக்கும் நீர் ஆதாரத்தைக் கொண்டு சாகுபடி செய்யலாம். களைத் தொல்லையைக் கட்டுப்படுத்தி உயர் மகசூலும் பெறலாம். பிற விவசாயிகளுடன் இணைந்து கூட்டாக துல்லிய பண்ணையம் மேற்கொண்டு, தரமான விளை பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்து, சந்தை வாய்ப்புகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக இணையம் மூலம் அறிந்து நல்ல விலைக்கு விற்றுப் பயன் பெறலாம்.

  அதேபோல மல்பெரி சாகுபடி செய்து, பட்டுப்புழுத் துறை வழங்கும் உதவிகளைப் பயன்படுத்தி பட்டுப்புழு வளர்க்கலாம். வேளாண் பொறியியல்துறை உதவி மூலம், வயலில் பண்ணைக் குட்டை அமைக்கலாம். அதில் வழிந்தோடும் மழை நீரைச் சேமித்து வைக்கலாம். அதில் மீன்வளத்துறை உதவியுடன், மீன் வளர்க்கலாம். தீவனப்பயிர் சாகுபடி செய்து பால்மாடுகள் வளர்த்து, அன்றாட வருமானத்தை  பெருக்கலாம்.

  ஆடுகள் வளர்த்து பருவந்தோறும் வருமானத்தைப் பெறலாம். சிறிய அளவில் கோழிப் பண்ணை அமைக்கலாம். வேலி ஓரங்களில் மரங்கள் வளர்த்து அடுத்த தலைமுறை வருமானத்திற்கு வழிவகுக்கலாம். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒத்துவரக்கூடிய

  தொழில்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு பயன்பெறலாம். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து உழவர் வாழ்வை உயர்த்தும் அட்மா (வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  ஆண்டாள் நாச்சியார் ஒரு திருப்பாவைப் பாடலில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து தெரிவித்துள்ளார்.

  பாவை நோன்பில் மாதம் மும்மாறி பொழிய மழை வளத்தை வேண்டும் ஆண்டாள் நாச்சியார், பயிர் சாகுபடியை ஓங்கு பெருஞ்செந்நெல் என்றும், மீன் வளர்ப்பை ஊடுகயல் என்றும், மலர் சாகுபடியை பூங்குவளைப்போதில் என்றும், தேனி வளர்ப்பை பொறிவண்டு கண்படுப்ப என்றும், கால்நடை வளர்ப்பை வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்றும் ஒரு விவசாயி இணைத்து மேற்கொள்ளும்பொழுது நீங்காத செல்வம் நிறையும் என நெறிப்படுத்துகிறார்.

  எனவே மார்கழி மாதத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை கடைப்பிடித்து சாதாரண பயிர் சாகுபடியோடு நின்று விடாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்துப் பல்வகைப் பயிர்சாகுபடிகளை மேற்கொண்டு வாய்ப்புள்ள வேளாண் உபதொழில்களையும் மேற்கொண்டு உயர் லாபமும், உன்னத வருமானமும் பெற்று வெற்றிகரமான விவசாயியாக வாழ்வில் உயர்வோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai