சுடச்சுட

  

  விதைகளில் பிற ரக பரிசோதனை செய்வதும், கலப்பில்லா விதைகளைப் பெறுவதும் விவசாயிகள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய பணிகளாகும்.

  இது தொடர்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் முகம்மது காசீம் கூறியது:

  தரமான விதை உற்பத்தி என்பது கலவன்களை உரிய நேரத்தில் தகுந்த முறையில் நீக்குவதன் மூலம் பெற முடியும். இதன் மூலம் விதைத் தரத்தையும் பேணிக் காக்க முடியும். நெல் சான்று விதைகள் அதிகமாக உற்பத்தி செய்வதால் வயல்களில் கலவன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  இதற்கு சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். அதிக அளவில் விதை நெல் வாங்கும்போது அனைத்து மூட்டைகளும் ஒரே ரகமாக உள்ளதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேல் ரகங்கள் வாங்கும்போது ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியே வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

  நாற்றுவிடுவதற்கு தயார் செய்யும்போது ரகங்கள் கலந்து விடாமலிருக்க வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு இடங்ளில் நாற்றுவிட வேண்டும். நாற்று நடவின்போதும் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு நாள் என்ற அடிப்படையில் நாற்றுப் பறித்தல், நடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடவு முடிந்தவுடன் மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

  அறுவடையின்போதும் ஒவ்வொரு ரகங்களையும் தனித்தனியே அறுவடை செய்ய வேண்டும். கதிரடித்தல், காயவைத்தலும் தனித்தனியாக இருக்க வேண்டும். நன்கு காய வைத்த விதைகளை புதிய கோணிகளில் மட்டுமே சேமிக்க வேண்டும். மூட்டைகளின் மேல் ரகங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பல ரகங்கள் இருந்தால் ரகம் வாரியாக மூட்டைகளை தனியாக வைக்க வேண்டும்.

  இந்த முறைகளைப் பின்பற்றினால் வயலில் கலவன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளில் பிற ரகங்கள் கலந்துள்ளதா என்பதை மைக்ரோஸ்கோப் மூலம் கண்டறியப்படுகிறது.

  சான்று விதைகளில் பிறரக விதைகள் இரண்டாயிரம் விதைகளுக்கு நான்கு விதைகள் மட்டுமே இருக்கலாம். ஆதார விதைகளில் பிறரகங்கள் இரண்டாயிரத்துக்கு ஒரு விதை மட்டுமே இருக்க வேண்டும். எனவே, பிறரக விதைப் பரிசோதனை மூலம் கலப்பில்லாத விதைகளைப் பெற்று உயர்மகசூல் பெறலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai