சுடச்சுட

  

  அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் வியாழக்கிழமை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

  போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 2013 ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிட்டது. புதிய ஒப்பந்தம் செப்டம்பர் முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்படவில்லை. இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் மறுத்து வருகிறது. அக்டோபர் மாதமே அனைத்து அரசுத் துறைகளுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் மூலமாகவே அகவிலைப்படி உயர்வைப் பெற வேண்டியுள்ளது. இப்போது, 11 மாதம் அகவிலைப்படி நிலுவை உள்ளது.

  எனவே, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

  இதன்படி, திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி மண்டல அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதம் தொடங்கியது.

  சங்கத் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். மோகன் தொடக்கிவைத்தார். பொதுச் செயலர் எஸ். பெருமாள் கோரிக்கைகளை விளக்கினார்.

  மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், சிஐடியூ மாவட்டத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பேசினர். திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலும் பணிபுரியும் சங்கத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இப் போராட்டம் வெள்ளி, சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai