சுடச்சுட

  

  "இந்தியாவில் கிடைத்ததில் தமிழ்மொழி கல்வெட்டுகளே அதிகம்'

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகழ்வாராய்ச்சிகளின் மூலம் இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் தமிழ் மொழி கல்வெட்டுகளே அதிகம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

  திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் "தொல்லியல் நோக்கில் தமிழ் எழுத்து வரலாறு' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் சு. ராசவேலு பங்கேற்றுப் பேசியதாவது:

  உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புள்ளியுடன் எழுத்துகள் உள்ள மொழியாக இந்தியாவில் தமிழ் மட்டுமே திகழ்கிறது. ழ, ல, ன போன்ற சில எழுத்துகள் தமிழ் மொழிக்கே உரித்தானவை.

  சிந்துசமவெளி நாகரிகத்தின்போது கிடைக்கப்பெற்ற எழுத்துகள், திராவிட எழுத்து வடிவில் உள்ளதாக அதை ஆராய்ந்த அனைத்து வெளிநாட்டினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய அறிஞர்கள் இதை இன்னும் ஒருமனதாக ஏற்காத நிலை காணப்படுகிறது. கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள் பயன்பாடு, பண்பாடு போன்றவற்றில் சிந்துசமவெளி நாகரிகமும், தமிழர்களின் நாகரிகமும் ஒத்ததாகவே இருந்துள்ளது. இந்தியாவில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பெற்றுள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் உள்ளன. கேரளப் பகுதிகளில் கிடைத்த பழங்கால கல்வெட்டுகளும் தமிழிலேயே எழுதப்பட்டிருந்தது அகழாய்வில் தெரியவந்துள்ளது.

  பாறைகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் எழுத்துப் பிழைகளைக் காண முடிகிறது. ஆனால், நடுகற்களில் எழுதப்பட்டுள்ள வாக்கியங்களில் பெரும்பாலும் பிழை இல்லை. இதன்மூலம் போர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்றதில் ஆதிச்சநல்லூர் அகழாய்வையே  சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள். இங்கிருந்து எடுக்கப்பட்ட 6 ஆயிரம் பொருள்கள் ஏற்கெனவே நாடு கடத்தப்பட்டுவிட்ட நிலையில், நமக்கு கிடைத்தப் பொருள்கள் மிகவும் சிலதான். அகழ்வாராய்ச்சிகளில் இன்றைய மாணவர்களிடையே அதிக ஆர்வமில்லை.  அனைத்துப் பகுதிகளும் நகர்மயமாகிவிட்டதாலும், அதிக செலவாவதாலும் இன்றைய சூழலில் அகழாய்வுகள் அதிகளவில் இல்லை. வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் அதிக பணம் செலவிட்டு வரலாறுகளைக் கண்டுபிடித்து வருகின்றன. அதுபோன்ற சூழல் இந்தியாவில் இல்லை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai