சுடச்சுட

    

    குடிநீர் இணைப்புகளுக்கு வால்வுகள் பொருத்துவதில் குளறுபடி

    By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய குடிநீர்த் திட்டத்துக்காக புளோ கன்ட்ரோல் வால்வு பொருத்துவதாகக் கூறி பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகிவிட்டதாக புகார் கூறப்படுகிறது.

    திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் புதிய குடிநீர்த் திட்டம் தொகுதி 1, தொகுதி 2 பணிகளானது மாநகராட்சியில் 8, 9, 10, 19, 26, 27 ஆகிய வார்டுகளில் நடைபெறுகின்றன.

    இதில், 19-ஆவது வார்டில் நடைபெறும் பணிகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக இப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    19-ஆவது வார்டுக்குள்பட்ட தியாகரநாகரில் பிளம்பர் எனக் கூறிக் கொண்டு வரும் நபர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் ரூ.3 ஆயிரம் வரை மிரட்டி வசூலிக்கின்றனர். வால்வு பொருத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். இது தொடர்பாக, மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால், இப்பகுதி மக்களை மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசியும், தாக்கி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.

    இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக வால்வு பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும். குடிநீர்த் திட்டத்துக்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தையும் புதுப்பித்த பிறகே வால்வு பொருத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.

    கழிப்பறை வசதி கோரி மனு: இதேபோல, திருநெல்வேலி மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் முஹம்மது அய்யூப், செயலர் ஜமால் முஹம்மது ஹூûஸன் ஆகியோர் மேயரிடம் அளித்த மனு:

    கல்லணை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 3,700 மாணவிகளுக்கு ஒரேயொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. ஒரே நேரத்தில் 40 மாணவிகள் மட்டும் பயன்படுத்தும் இந்தக் கழிப்பறையை அதிக மாணவிகள் பயன்படுத்த முடிவதில்லை.

    இந்தக் கழிப்பறையும் சுத்தமாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது.  கூடுதல் கழிப்பறைகள் கட்டுவதுடன், குடிநீர் வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல, நேதாஜி போஸ் மார்க்கெட்டிலிருந்து அண்ணா சாலைக்கு வரும் பொதுமக்கள் முகம்சுழிக்கும் வகையில் திறந்தவெளியில் கழிப்பறையாக பயன்படுத்துவதை தடுத்து புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வள்ளுவர், பாரதி, வ.உ.சி-க்கு சிலை: திருநாவுக்கரசர் சிவ வழிபாட்டு மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் வே. முத்துக்குமாரசாமி அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 27-ஆவது வார்டுக்குள்பட்ட அரசு அலுவலர் அ குடியிருப்பு, அன்னை கல்யாண மண்டபம் அருகே திருவள்ளுவர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருக்கு சிலைகள் அமைக்க மாநகராட்சி அனுமதியளிக்க வேண்டும். இந்த சிலைகளை பராமரிக்க மன்றத்தின் சார்பில் பராமரிக்கவும் அனுமதியளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மேயர் விஜிலா சத்தியானந்திடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai