சுடச்சுட

    

    ரேஷன் கடைகளால் நலிவடைந்து வரும் கூட்டுறவுச் சங்கங்கள்!

    By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவுச் சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நலிவிலிருந்து சங்கங்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் 158 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 33 தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகளும், 4 வேளாண்மை உற்பத்தியாளர் மொத்த விற்பனை நுகர்வோர் சங்கங்களும், மொத்த கூட்டுறவு பண்டகசாலையும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி 792 முழுநேரக் கடைகள், 332 பகுதிநேரக் கடைகள் என மொத்தம் 1,124 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதேபோல, தமிழகம் முழுவதும் 30,086 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில், 25 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தாமலிருப்பது, 100 சதவீத மானியம் வழங்காமலிருப்பது, கோணிப் பை ஏலத்தில் எதேச்சதிகாரப் போக்கு, தேவையற்ற காரணங்களால் கடைகளைப் பிரிப்பது, ஆண்டுதோறும் உயர்ந்து வரும் ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றால் நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நசிந்து வருகிறது.

    பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் பல மாதங்களுக்கு நிலுவை வைத்திருக்கும் நிலையும், பல நிறுவனங்கள் திவாலாகும் நிலையிலும் உள்ளன. அரசின் பெரும்பாலான திட்டங்களை நியாயவிலைக் கடைகள் மூலமே செயல்படுத்திவரும் சூழலில் கூட்டுறவு நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படுவது கவலைக்குரியது. பொதுவிநியோகத் திட்டத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் உள்ளது.

    2000-ம் ஆண்டில் 100 கிலோ அரிசி மூட்டைக்கு கமிஷனாக ரூ. 45 வழங்கப்பட்டது. இதில், 18 ரூபாய் லாரி வாடகை, ஏற்று, இறக்குக் கூலி, சரக்குக் கையாளும் பணிக்குச் செலவிட வேண்டியுள்ளது. 28 ரூபாய் ஊழியர்களின் ஊதியத்துக்கும் மீதமுள்ள தொகை கடையின் வாடகை, மின்சாரம் மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டது.

    ஆனால், தொடர்ந்து உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வால் லாரி வாடகை கடந்த 13 ஆண்டுகளில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. 2000-ம் ஆண்டில் லாரி வாடகைக் கட்டணம் மூட்டைக்கு ரூ. 7 ஆக இருந்தது. இப்போது, ரூ. 16.50 காசு ஆக உயர்ந்துவிட்டது. ஏற்று, இறக்குக் கூலி, இதர சரக்குக் கையாளும் பணிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதேபோல, அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் வரும் கோணிப் பைகளை ஏலத்தில் விடுவதிலும் உரிய வருவாய் கிடைப்பதில்லை. அரசியல் தலையீடு, அலுவலர்கள் நிர்பந்தம் ஆகியவற்றால் கோணிப் பைகளின் ஏலத்திலும் பற்றாக்குறை வருவாயே கிடைக்கிறது.

    300 குடும்ப அட்டைகள் உள்ள கடைக்கு ஆண்டுக்கு வரவு-செலவுக் கணக்கு பார்த்தால் விற்பனை மூலம் கிடைக்கும் கமிஷன், கோணிப் பை மூலம் கிடைக்கும் வருவாய் சேர்த்து மாதம் ரூ. 4,195 கிடைக்கிறது. ஆனால், கடை வாடகை, ஊழியர் ஊதியம், மின் செலவு, லாரி வாடகை, ஏற்று, இறக்குக் கூலி, படிவங்கள், கடை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் சேர்த்து ரூ. 16 ஆயிரம் வரை செலவாகிறது. வருவாயைக் கழித்துப் பார்த்தால் நஷ்டம் மட்டும் ரூ. 11 ஆயிரத்துக்கு மேல் வருகிறது.

    ஆண்டுக்கு கணக்கிட்டால் கடைக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. 300 குடும்ப அட்டைகள் உள்ள கடைக்கே இந்த நிலையுள்ளது. ஆனால், அதிகபட்சம் 2 ஆயிரம் எண்ணிக்கையிலும் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் உள்ளன. அவற்றையெல்லாம் சேர்த்து மாநிலம் முழுவதும் உள்ள 30 ஆயிரம்

    கடைகளுக்குமான நஷ்டத்தை கணக்கிட்டால் ஆண்டுக்கு பல கோடியாகிறது. இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம். தமிழ்ச்செல்வன் கூறியது:

    நெல்லை பேரங்காடிக்கு உள்பட்டு 100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதனால் இப் பேரங்காடிக்கு மட்டுமே மாதத்துக்கு ரூ. 5 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கும் இதே நிலைதான். முன்பு 100 சதவீத மானியம் இந்த கடைகளுக்கு வழங்கப்பட்டது. இப்போது 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றார் அவர்.

    தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியூ) மாநிலப் பொதுச் செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி கூறியது: பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமெனில் நலிந்து வரும் கூட்டுறவு நிறுவனங்களை மீட்க வேண்டியது அவசியம். அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கான விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை முழுமையாக (100 சதவீதம்) வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதைப்போல கமிஷன், மானியத்தை உயர்த்த வேண்டும். கோணிப் பை ஏலத்தில் வருவாய் வரும் வகையில் விலை நிர்ணயிக்க வேண்டும். அரசியல், சாதியப் பிரச்னைகளுக்காக கடைகளை இரண்டாகப் பிரித்து கூடுதல் பளு ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் கடைகளை மூடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai