சுடச்சுட

    

    கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் மோதல்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

    By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ்  ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்து முன்னணி மற்றும் கிறிஸ்தவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 31 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவர், கூலக்கடை பஜாரில்  ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் நற்செய்தியை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்துக்கு வியாழக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஊர்வலமானது பர்வத சிங்க ராஜா தெருவில் செல்லும்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடத்தியவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் மீது திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்து முன்னணி சார்பிலும் இதேபோல புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 31 பேர் மீது போலீஸார் வழக்குப்  பதிந்துள்ளனர். மேலும், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் வை. ராஜேஷ், ராஜா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதையடுத்து, கிறிஸ்தவர்கள் தரப்பில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாமல், நியாயம் கேட்கச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக பொய் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி நகரம் பகுதியில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தை நடத்தவிடாமல் செய்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காவல் துணை ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

    இவ் வழக்கு தொடர்பாக வேம்பு, தாஸ், கருப்பசாமி, சுரேஷன் ஆகியோரை  திருநெல்வேலி நகரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai