சுடச்சுட

  

  மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் மின்வெட்டை குறைக்க முடியும்: தலைமைப் பொறியாளர் அறிவுரை

  By திருநெல்வேலி  |   Published on : 21st December 2013 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒட்டுமொத்த மின்நுகர்வோரும் மின்சாரம் சேமிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை பெருமளவு குறைக்க முடியும் என மின்சார வாரிய திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர். சந்திரசேகரன் அறிவுறுத்தினார்.

  வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின் சிக்கன வார விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

  தேவையற்ற தருணங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே பெருமளவு மின்வெட்டை குறைக்க முடியும். ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது என்பது 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு ஒப்பானது. வீடு, வணிகம், தொழிற்சாலை, விவாசயம் என அனைத்து தரப்பு மின்நுகர்வோரும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

  தேவையுள்ள இடங்களில் தேவையான நேரத்தில் மட்டும் மின்சாரத்தை பயன்படுத்தவேண்டும். தரமுள்ள மின்சாதனங்களை பயன்படுத்தி மின்கசிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும். பழுதடைந்த மின்சாதனங்களை உடனடியாக சரி செய்யவேண்டும். கையடக்க குழல் விளக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

  தொழிற்சாலைகளிலும், விவசாயத்துக்கும் ஐஎஸ்ஐ முத்திரையிட்ட மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளின் கூரைகளுக்கும், சுவர்களுக்கும் மிதமான வண்ணம் கொண்ட பூச்சுகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக ஒளி தேவையைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு உபயோகத்துக்கும் தகுந்த திறன் உள்ள மோட்டார்களை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

  விழாவில், மேற்பார்வை பொறியாளர் ஏ.சுப்பிரமணியன், சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தலைவர் ஏ. ஆனந்தசேகர், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், கங்காதரன், தாமோதரன் உள்ளிட்ட பலர் பேசினர். விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மின்வாரிய அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai