சுடச்சுட

  

  விவசாயப் பணிகளுக்கு எம்பி, எம்எல்ஏ தொகுதி நிதி

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை தடுப்பணைகள் கட்டவும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தவும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

  எம்எல்ஏ, எம்பி-க்கள் தங்களது நிதியை பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பது, கழிப்பறை, வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கே ஒதுக்கி வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு நீராதாரத்தைப் பெருக்கவும், பாதுகாக்கவும் எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே, எம்எல்ஏ, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை அணைகள் கட்டவும்,  குளம், குட்டை அமைக்கவும், ஏரிகள் தூர்வாரவும், கால்வாய் தூர்வாரவும் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி தொகுதிகளில் முதலில் பணிகளைத் தொடங்கவேண்டும்.

  மணல் கொள்ளை:  மாவட்டம் முழுவதும் நீர்ப்படுகைகளில் மணல் கொள்ளை தொடர்கதையாகி வருகிறது. கனிமவளத் துறையினர் கண்டுகொள்வதே இல்லை. கடன் பெற்ற விவசாயிகளிடம் வங்கிகளில் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். தவணை செலுத்தாத விவசாயிகளின் டிராக்டர்களை இரவு நேரத்தில் வந்து பறிமுதல் செய்கின்றனர். மாவட்டத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான வாழைகள் நாசமாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

  கொள்முதல் மையம்: வரும் தை, மாசி மாதங்களில் அறுவடை தீவிரமடையும் என்பதால் 4 கிராமங்களுக்கு ஒரு நெல்கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இல்லையெனில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு ஒரு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். மன்னர் காலத்து குளங்கள்: மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் பலவும் மாவட்டத்தில் அழிந்து வருகின்றன. எனவே, அனைத்து குளங்களையும் புனரமைத்து நீர்ப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 11 அணைகள், கால்வாய்களை தூர்வார வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி என்ற வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆயிரம் கோடியை முன்பே ஒதுக்கீடு செய்யவேண்டும்.

  ஓய்வூதியம்: 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சரவணபொய்கை நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பது, கடைகள் அமைப்பது உள்ளிட்ட பேரூராட்சியின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மானூர் குளத்துக்கு நீர்வரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனர் விவசாயிகள்.

  இதற்கு பதில் அளித்துப் பேசிய ஆட்சியர் மு.கருணாகரன், விவசாயிகள் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் கோரிக்கைகள் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் சி. பத்மா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சௌந்தரராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், 6 விவசாயிகளுக்கு ரூ.4.72 லட்சம் மானியத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் களைஎடுக்கும் கருவிகள், விசை உழுவைகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai