சுடச்சுட

  

  அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

  By திருநெல்வேலி  |   Published on : 22nd December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வட்டார அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

  ஒருங்கிணைப்புக் கூட்டம்: உரம், விதை மற்றும் பூச்சிமருந்து விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை ஆட்சியர் மு. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் விவசாயிகள் உரம் விநியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தெரிவித்தனர்.

  எச்சரிக்கை: விவசாயிகள், விற்பனையாளர்கள் கருத்தை கேட்டறிந்த ஆட்சியர் கூறியதாவது: அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வதாக தெரியவந்தால் விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  உரம் இருப்பு மற்றும் விற்பனை விலையுடன் கூடிய அனைத்து விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தினசரி பதிவுகளுடன் விற்பனை நிலையத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் கண்டிப்பாக வைக்க வேண்டும்.

  கண்காணிப்புக்குழு: விற்பனை செய்யும் உரம், விதை இடுபொருள்களுக்கு கண்டிப்பாக பில் வழங்க வேண்டும். பில் இல்லாமல் விற்பனை செய்தால் அத்யாவசியப் பொருள்கள் சட்டம் மற்றும் பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டார அளவில் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, அனைத்து விற்பனை நிலையங்களிலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

  தரமற்ற உரங்கள், சிதிலமடைந்த உரச்சாக்குகளில் வைத்து விற்பனை, காலாவதியான பொருள்களை விற்பனை செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும். நீதிமன்ற வழக்கு, அபராதம் விதித்தல் மற்றும் நீதிமன்ற வழக்கின் மூலம் சிறைத் தண்டனை பெற்றுத் தருதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே உரவிற்பனை நிலையங்களில் விதிகளின்படி உரம் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

  கூட்டத்தில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்) பூ. பாலசுப்பிரமணியன், விதைச்சான்று துணை இயக்குநர் த. இளங்கோ, விதைச்சான்று உதவி இயக்குநர் எஸ். அசோக்குமார், தரக்கட்டுபாடு வேளாண் உதவி இயக்குநர் கஜேந்திரபாண்டியன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai