சுடச்சுட

    

    அரசுப் பேருந்துகளுக்கான சாலை வரி, டீசல் மீதான வரிகளை நீக்க வேண்டும்

    By திருநெல்வேலி  |   Published on : 22nd December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை நஷ்டத்திலிருந்து மீட்க சாலை வரி, டீசல் மீதான விற்பனை வரி உள்ளிட்ட வரிகைளை நீக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

    அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். 10 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

    இதன்படி, திருநெல்வேலி மண்டலத்திலும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் 3 நாள்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    3-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை வகித்து சங்க இணைப் பொதுச் செயலர் டி. காமராஜ் பேசியது:

    உரிய திட்டமிடல், சரியான கொள்கைகள், பாரமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் உள்ளது. இதர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்குவதைப் போன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையும் லாபத்தில் இயக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக கேரளத்தில் உள்ளதைப் போன்று அரசுப் பேருந்துகளுக்கு சாலை வரி நீக்கப்பட வேண்டும். டீசல் மீதான தமிழக அரசின் அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும். டீசலுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். பணிமனைகளில் போதிய உதிரிபாகங்கள் இல்லாததால் பெரும்பாலான பேருந்துகள் பழுதுடனே இயக்கப்படுகின்றன. இதனால், அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்கும் அவலநிலை தொடர்கதையாகி வருகிறது. பேருந்துகளை பராமரிக்கவும், தேவையான உதிரி பாகங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலே அரசுப் போக்குவரத்துக் கழகம் லாபத்தில் இயங்கும். தொழிலாளர்களுக்கும் பணிச் சுமை இருக்காது என்றார்.

    எல்ஐசி ஊழியர்கள் சங்க திருநெல்வேலி கோட்ட பொதுச் செயலர் சி.முத்துக்குமாரசாமி பேசியது: பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு சலுகைகள் வழங்காவிட்டாலும், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றார் அவர்.

    போக்குவரத்து தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் எஸ். சிவதாணுதாஸ், ஆர். தங்கராஜ், ஜான்கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    சிஐடியூ மாநில துணைத் தலைவர் டி. ரசூல், உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai