சுடச்சுட

  

  தூய யோவான் கல்லூரி விவகாரம் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய போராட்டம்: மூட்டா

  By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூய யோவான் கல்லூரி விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுத்த காவல்துறையை கண்டித்தும், பேராசிரியர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநில அளவில் போராட்டம் நடத்த மூட்டா திட்டமிட்டுள்ளது.

  பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் கூட்டமைப்பான மூட்டா சார்பில், திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர்,செய்தியாளர்களிடம் மூட்டா பொதுச் செயலர் எஸ். சுப்பாராஜு கூறியது:

  தூய யோவான் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்கள் விதிமுறைகளின்படி 2 மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்து பாடம் நடத்தினர். ஆனால், கல்லூரி நிர்வாகத் தரப்பில் ஆசிரியர்களின் வருகைப்பதிவேட்டில் திருத்தம் செய்து இரு ஆசிரியர்களையும் வெளியேற்றிவிட்டனர். அனுமதி மறுப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பிய மூட்டா சங்க நிர்வாகிகள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக அதற்கு முன்பாகவே புகார் அளிக்கப்பட்டது.

  ஆசிரியர்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், கல்லூரி முதல்வர் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மூட்டா கிளைச் செயலர் ஆன்ட்ரூஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையானது ஒருதலைபட்சமாக உள்ளது.

  ஆசிரியர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்து கல்லூரி முதல்வரைக் கைது செய்ய வேண்டும். பேராசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணைத் தலைவர் எம். நாகராஜன், மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மண்டலச் செயலர் ஆர். முருகேசன், மண்டலப் பொருளாளர் நசீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai