சுடச்சுட

  

  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கலைப் போட்டிகள்

  By திருநெல்வேலி  |   Published on : 22nd December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கலைப் போட்டிகளில் மணப்படை வீடு ஊராட்சி கூட்டமைப்பு இரு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

  பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், ஒன்றிய அளவில் உள்ள ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகள், மகளிர் குழுக்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

  திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை ஒன்றியக் குழுத் தலைவர் ஸ்வர்ணரமா தங்கராஜ் தொடங்கிவைத்தார். கோலப்போட்டி, குழுவாக பாடுதல், பட்டிமன்றம், தெருக்கூத்து மற்றும் நாடகம் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

  இதில், 30 ஊராட்சிகள் அளவிலான கூட்டமைப்புகளும், மகளிர் சுய உதவிக் குழுவினரும் கலந்துகொண்டனர்.

  பூக்கள், வண்ண, வண்ணப் பொடிகள், உப்புக்கல் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருள்களைப் பயன்படுத்தி வித,விதமான கோலங்களை வரைந்திருந்தனர்.

  போட்டிக்கான நடுவர்களாக கணபதி சுப்பிரமணியம், முத்துசாமி, செல்விசுந்தரி, மீனாட்சி ஆகியோர் பணியாற்றினர். இதில்,  குழுவாகப் பாடுதல் போட்டியில் மணப்படை வீடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு முதலிடம் பெற்றது. இதேபோல, பட்டிமன்றத்திலும் இதே கூட்டமைப்பு முதலிடம் பெற்றது. கோலப்போட்டியில் குன்னத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பும், நாடகப் போட்டியில் சிவந்திப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பும் முதலிடம் பிடித்தது.

  ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்துக்கு ரூ.500, இரண்டாவது இடத்துக்கு ரூ.300, மூன்றாமிடத்துக்கு ரூ.200 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவைத் தவிர சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகசுப்பிரமணியன், செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

  ஏற்பாடுகளை, ஒன்றியக் கவுன்சிலர்களும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai