சுடச்சுட

  

  செங்கோட்டையில் வாஞ்சிநாதன் மணிமண்டபம் இன்று திறப்பு

  By தென்காசி,  |   Published on : 23rd December 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கோட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை (டிசம்பர் 23) திறந்துவைக்கிறார்.

  வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை  முத்துசாமி பூங்காவில் மணிமண்டபம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து  உத்தரவிட்டது.

  தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், அந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் திங்கள்கிழமை விடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைக்கிறார்.

  மணிமண்டபத்திற்குள் வாஞ்சிநாதனின் மார்பளவுச் சிலை  வைக்கப்பட்டுள்ளது.

  வரலாற்றில் இடம் பெற்ற வாஞ்சிநாதன்: இந்திய விடுதலைப் போரில் பகத்சிங்கிற்கும் முன்னோடியான வாஞ்சிநாதன்  செங்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சங்கரநாராயணன். திருவனந்தபுரத்தில் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்தபோதே, வனத் துறையில் வேலை கிடைத்ததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார்.

  ஆனால், ஆங்கிலேயரிடம் அடிபணிந்து வேலை பார்ப்பதா என்ற எண்ணத்தில் அந்த  வேலையை உதறினார். நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்த வாஞ்சிநாதனும், அவருடைய கூட்டாளிகளும் ஏற்படுத்திய இயக்கம் தான் பாரதமாதா சங்கம்.

  இந்த சங்கத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வாஞ்சிநாதன்.

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ராபர்ட் வில்லியம் டி.எஸ்.டி.கார்ட் ஆஷ்துரை  பதவியேற்ற நாள்முதல் சுதேசி சிந்தனையாளர்களையும், சுதேசி பிரசாரம் மேற்கொள்பவர்களையும் கண்மூடித்தனமாக தாக்க உத்தரவிட்டிருந்தார்.

  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைதுக்கும்  திருநெல்வேலியில் ஏற்பட்ட கலகத்திற்கும் காரணமான ஆஷ்துரையை கொலை செய்யவேண்டும் என்பதில் பாரதமாதா சங்கத்தின் உறுப்பினர்கள் தீவிரமாக இருந்தனர்.

  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷ்துரையை சுட்டுக் கொல்வதற்காக வாஞ்சிநாதன் புதுவையில் பயிற்சி மேற்கொண்டார்.

  1911-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி ஆஷ்துரை கொடைக்கானலுக்கு சென்று  ஓய்வெடுக்கப் போவதாக வாஞ்சிநாதனுக்கு தகவல் கிடைத்தது.

  திருநெல்வேலியிலிருந்து  கிளம்பிய ரயிலில் மணியாச்சியில் வேறுவண்டி மாறக்கிடைத்த சந்தர்ப்பத்தில்,  ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு கழிவறைக்குள் நுழைந்து தானும் சுட்டுக்கொண்டு உயிர் நீத்தார் வாஞ்சிநாதன்.

  ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்ட நேரம்  காலை 10.50 மணியாகும். எனவேதான் ஆண்டுதோறும் அந்த நேரத்தில்  செங்கோட்டையில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில்  செங்கோட்டை நகராட்சியின் சங்கு ஒலிக்கப்படும். வாஞ்சிநாதன் நினைவாக மணியாச்சி ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai