சுடச்சுட

  

  திருநெல்வேலியில் தேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா  நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் சார்பில், மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் டி. மோகனரங்கன் பேசியது: எத்தகைய ஆற்றலாக இருந்தாலும் அதனை வீணாக செலவழிப்பதால் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, எதிர்கால தலைமுறைக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவே அமையும். குறிப்பாக எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

  ஒவ்வொரு தனிமனிதனும் சிக்கனத்தை கடைப்பிடித்தால் மட்டுமே சமூகம் சார்ந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்டு ஆற்றலை சேமிக்க முடியும்.

  கிராமப்புற வீடுகளில்கூட சமையல்எரிவாயு பயன்பாடு என்பது அத்தியாவசியமாகிவிட்ட சூழலில் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். சிலிண்டர் உபயோகத்தில் இல்லாதபோது ரெகுலேட்டரை மூடி வைக்க வேண்டும். மிகச் சிறந்த பாதுகாப்புமிக்க 5 ஆண்டுகள் உத்தரவாதமுள்ள காஸ் டியூப்களை (ஹோஸ்) மட்டுமே பயன்படுத்தவேண்டும். சமைக்கும்போது அடுப்பின் அருகிலேயே ஒருவர் இருக்க வேண்டும். சிலிண்டரை விட உயரமான இடத்தில் அடுப்பு வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் வைத்திருக்கும் அலமாரி காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

  காஸ் கசிவு இருந்தால் மின்சார சுவிட்சை இயக்கவோ, அணைக்கவோ கூடாது. ரெகுலேட்டரை உடனே கழற்றி பாதுகாப்பான வெள்ளை வண்ண மூடியால் மூடி வைக்கவேண்டும் என்றார்.

  வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தபடி எரிபொருள் சேமிப்பு அளவீடு முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. காஸ் அடுப்பு பயன்பாடு தொடர்பாக நேரடி செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாவட்ட அறிவியல் மைய அதிகாரி சீதாராம் வரவேற்றார். கல்வி உதவியாளர் என். பொன்னரசன் மற்றும் அறிவியல் மைய நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai